''
தேர்தல் நடைபெறும் இந்தச்சூழலில் முல்லைத்தீவில் நடைபெறும் மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த இந்திய அரசு முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான எதிர் விளைவுகளை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் '' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தில் போரை நிறுத்தும்படி உலகமெங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஒரு சில நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென வெளிப்படையாக அறிவித்ததையும் சிங்கள இனவெறி அரசு பொருட்படுத்தவில்லை.போர் முனையில் சிக்கியுள்ள பொது மக்களையும் புலிகளையும் ஒட்டு மொத்தமாக அழித்தே தீருவது என்னும் வெறித்தனத்தோடு சிங்கள காடையர்கள் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஈழத்தில் உடனடி போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தி தி.மு.க. தலைவர் கலைஞர் அழைப்பு விடுத்தார். பொது மக்களும், தொழிலாளர்களும், வணிகர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் தாமாகவே முன்வந்து பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று தமது சிங்கள எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த அறப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.அதே வேளையில், “பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்” என்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளிப்படையாக அறிவித்ததோடு அவ்வாறு பிரசாரத்திலும் ஈடுபட்டார் என்பது வரலாற்றில் மன்னிக்க முடியாத இனத்துரோகமாகும்.அவருக்கு உறுதுணையாக பா.ம.க., ம.தி.மு.க., இடதுசாரிகள் செயல்பட்டிருப்பதும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக உள்ளது. இதிலிருந்து அ.தி.மு.க. அணியினரின் உண்மை முகமும் உள்நோக்கமும் என்ன வென்பது அம்பலப்பட்டிருக்கிறது. அவர்கள் ஈழத்தில் போரை நிறுத்த வேண்டும் என்பதைவிட தி.மு.க.வையும் அதன் கூட்டணி கட்சியையும் வீழ்த்த வேண்டும் என்பதில் தான் தீவிரமாக உள்ளனர் என்பது வெளிப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், அங்கே போர் நிறுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பது தான் அ.தி.மு.க. அணியினரின் உண்மையான நோக்கமாக உள்ளது என்பதை அறிய முடிகிறது.
அங்கே போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டால் தேர்தல் ஆதாயம் தேடமுடியாது என்று அ.தி.மு.க. அணியினர் பதறுவதை உணர முடிகிறது. ஈழத் தமிழினம் அழிவதையும் புலிகள் கொல்லப்படுவதையும் அரசியலாக்கி தி.மு.க. மீது பழி சுமத்தி தேர்தலில் அறுவடை செய்து விடலாம் என்று ஜெயலலிதாவும் அவரது கூட்டணிக்கட்சி தலைவர்களும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இந்த பொது வேலை நிறுத்தத்தை அவர்கள் புறக்கணித்ததிலிருந்து இந்த உண்மைகளை உணர்ந்துக்கொள்ள முடிகிறது.
ஜெயலலிதா, அவரது கூட்டணிக்கட்சித் தலைவர்கள் நேரடியாக இந்திய அரசையோ அல்லது காங்கிரஸ் கட்சியையோ விமர்சிக்காமல் வெளியுறவுத்துறையில் எந்த வகையிலும் அதிகாரமே இல்லாத ஒரு மாநில அரசை குறி வைத்து விமர்சிப்பதும் பழிசுமத்துவதும் தேர்தல் ஆதாயத்திற்காக மட்டும் தான் என்பது உறுதியாகிறது. ஒரு மாநில அரசு தம்முடைய அதிகாரத்தை பயன்படுத்தி என்ன செய்யமுடியுமோ அந்த அளவில் தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
ஐ.நா.சபையின் பாதுகாப்பு அவையானது கடந்த 22ஆம் நாள் ஈழத் தமிழர்கள் தொடர்பாக விவாதிக்க முயன்றபோது சீனா அரசும், ரஷியா அரசும் தமது “வீட்டோ” அதிகாரத்தை பயன்படுத்தி அம்முயற்சியை முறியடித்துள்ளனர். இங்கே அ.தி.மு.க.வோடு சேர்ந்து கொண்டு அதிகாரமில்லாத மாநில அரசை விமர்சிக்கும் இடதுசாரிகள் சீனா, ரஷியா அரசுகளின் இத்தகைய தமிழின விரோதப்போக்கை விமர்சிக்காததும் கண்டிக்காததும் ஏன்?
தேர்தல் நடைபெறும் இந்தச்சூழலில் முல்லைத்தீவில் நடைபெறும் மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த இந்திய அரசு உண்மையாகவும், முழுமையாகவும் முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால் கடுமையான எதிர் விளைவுகளை காங்கிரசு கட்சி சந்திக்க நேரிடும் என்பதை விடுதலைச்சிறுத்தைகள் தோழமையாகவும் எச்சரிக்கையாகவும் சுட்டிக் காட்ட கடமைப்பட்டிருக்கிறது.
இந்திய அரசு ஈழச்சிக்கலுக்கு நிலையான அரசியல் தீர்வுக்காண வேண்டும் என்பதில் உண்மையான அக்கறை கொண்டிருக்குமேயானால், எமது வேண்டுகோளை சிங்கள ஆட்சியாளர்கள் புறக்கணித்தது உண்மையானால் சிங்கள அரசுக்கு எதிராக உடனடியாக படையெடுப்பு நடத்தியாவது அங்கே போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.
ஈழத் தமிழர்களை பாதுகாக்க மட்டுமல்ல, ஈழச்சிக்கலை தீர்ப்பதற்காக மட்டுமல்ல சிங்களவனோடு கைகோர்த்துக் கொண்டு இந்தியாவுக்கு கடும் அச்சுறுத்தலை செய்து வருகின்ற சீனா, ரஷியா அரசுகளின் சதி நடவடிக்கைகளிலிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த படையெடுப்பை நடத்த வேண்டியது இன்றியமையாத தேவையாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.