Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்குகேட்டு தமிழகம் வரக்கூடாது: சோனியா, மன்மோகன், பிரணாப்புக்கு திரையுலகம் எச்சரிக்கை

செய்தியாளர் பெருமாள்

வாக்குகேட்டு தமிழகம் வரக்கூடாது: சோனியா, மன்மோகன், பிரணாப்புக்கு திரையுலகம் எச்சரிக்கை
சென்னை: , வியாழன், 23 ஏப்ரல் 2009 (20:25 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ள தமிழ் திரையுலகம், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
webdunia photoWD

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் படுகொலையை செய்யப்படுவதை கண்டித்து போராடுவதற்காக, தமிழ் திரையுலகினர் சார்பில் 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதன் சார்பில் சென்னை பிலிம் சேம்பர் வளாகத்தில் இன்று 'தொடர் முழக்க போராட்டம்' நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரவு 7 மணிவரை நடைபெற்றது.

இப்போராட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், சசிகுமார், வி.சி.குகநாதன், முருகதாஸ், அமீர், வசந்த், மனோஜ்குமார், ஹரி, ஜீவன், வசந்தபாலன், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், ஆதி, சிவா, பாலுமகேந்திரா, வி.சேகர், வெற்றிமாறன், கே.எஸ்.அதியமான், எழில், கதிர். தங்கர்பச்சான், கிருஷ்ண குமார், தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், சோழா பொன்னுரங்கம், புலவர் புலமைபித்தன், நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, சேரன், மணிவண்ணன், கஞ்சா கருப்பு, கவிஞர்கள் மேத்தா, சினேகன், வசனகர்த்தா பிரபாகர், நடிகைகள் ரோகினி, புவனேஸ்வரி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், மூத்த வழக்கறிஞர் கருப்பன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழருவி மணியன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம் மற்றும் திரையுலகினர், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தின் முடிவில் இயக்குனர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா உரையாற்றினார். அப்போது, 'திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம்' சார்பில் இரண்டு தீர்மானங்களை அவர் வெளியிட்டார். அதன் விபரம்:

தீர்மானம் 1 :

மத்தியில் உள்ள ஆளும் கட்சியினர் இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த உத்தரவிட்ட பின்னர், தமிழகத்தில் வந்து வாக்கு கேட்பது தான் நியாயமானது. எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது. அதையும் மீறிவந்தால் எங்களது முழு எதிர்ப்பை காட்டுவோம். அப்போது, அவர்களது நிழல் கூட துணையாக நிற்காது விலகி விடும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம். எனவே, எங்களது உணர்வுகளை புரிந்துகொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும்.

தீர்மானம் 2 :

மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசின் தமிழகத் தலைவர் தங்கபாலு போட்டியிடும் சேலம் தொகுதியிலும், உயர் பதவியில் போதுமான அதிகாரத்தில் இருந்தும் எதுவும் செய்யாமல் மவுனம் காத்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியிலும், தமிழனப் படுகொலையை நியாயப்படுத்தி வரும் மற்றொரு மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடும் ஈரோடு தொகுதியிலும் உள்ள பொதுமக்கள், தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விதமாக இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தொகுதிகளில் தமிழ் திரையுலகின் இன உணர்வுள்ள அத்தனை கலைஞர்களும் தங்கள் சொந்த பொறுப்பில் மக்களை சந்தித்து, இந்த 3 பேருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வார்கள். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil