இலங்கையில் தற்பொழுதுள்ள நிலைமை குறித்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆலோசனை நடத்தினார்.
தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக்கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் சுதர்சனம், பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, முதலமைச்சர் கருணாநிதி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக் குழு கூடி விவாதித்து இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று சிறிலங்க அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்றும், இதனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை அவசரமாகக் கூடி இலங்கைப் பிரச்சனை குறித்து விவாதித்துள்ளது என்றும் கூறினார்.
இலங்கையில் தமிழர்கள் வாழ்வுரிமையை உறுதி செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் எடுக்கும் என்றும் தங்கபாலு கூறினார்.
சிறிலங்க அரசு போர் நிறுத்தம் செய்யத் தவறினால் தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு டெல்லிக்குச் சென்று சோனியாவைச் சந்தித்து சிறிலங்க அரசை போர் நிறுத்தம் செய்யுமாறு வலியுறுத்துமாறு அழுத்தம் தர வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.