இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம், புதுச்சேரியில் இன்று பொது வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. பேருந்துகள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் தாமாக முன்வந்து வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த வேலை நிறுத்த அழைப்புக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும், அனைத்து அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஆனால் தமிழகத்தில் முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. இந்திய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் பேருந்துகள், இரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு மாறாக பேருந்துகள் ஓடவில்லை.
இன்று காலை 6 மணிக்கு தொடங்கி பொது வேலை நிறுத்தம் அமைதியாக நடந்து வருகிறது. எங்கும் அசம்பாவித நிகழ்வுகள் நடைபெறவில்லை. பேருந்துகள் ஓடாததால் வேலைக்கு செல்பவர்கள் பெரும் அவதிப்பட்டனர். அவர்கள் ஆட்டோக்களில் அதிக பணம் கொடுத்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சினிமா தியேட்டர்களில் இன்று காலை 11 மணி காட்சி, பகல் 3 மணி காட்சி ஆகிய 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் பால், தண்ணீர் வாகனங்கள் ஓடியது.
''நாங்கள் பேருந்துகளை இயக்க முன்வந்தும் அரசு போக்குவரத்து பணிமனைகளை அதிகாரிகள் பூட்டி சென்று விட்டதாக'' அ.இ.அ.தி.மு.க. தொழிற்சங்கத்தினர் குற்றம்சாற்றினர்.
புதுச்சேரியிலும் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமான நடந்து வருகிறது. பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.