குற்றவாளி கூண்டில் காங்கிரஸ், தி.மு.க. - வைகோ
சென்னை , புதன், 22 ஏப்ரல் 2009 (15:39 IST)
''
ஈழத் தமிழர்களை கொன்ற மாபாதகத்திற்கு முழு காரணமான காங்கிரசையும், தி.மு.க.வையும் மக்கள் மன்றத்தில் குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம்'' என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழின துரோகம் செய்த காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் மக்கள் மரண அடி கொடுக்கப் போவதால் அதைத் தவிர்த்து விடலாம் என்று மனப்பால் குடித்தவராக திடீரென்று தமிழ்நாட்டில் பொது வேலை நிறுத்தம் என்று அறிவித்து அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கேட்டுள்ளார்.இலங்கையில் போரை நிறுத்தாமல் சோனியா காந்தி தமிழ்நாட்டுக்கு வரக் கூடாது என்று சொல்லத் திராணியற்ற கருணாநிதி தமிழர்களை ஏமாற்றும் ஆஷ்டானபூபதி ஆகிவிட்டார்.ஈழத் தமிழர்களைக் கொன்ற மாபாதகத்துக்கு முழுக்க, முழுக்கக் காரணமான காங்கிரசையும், தி.மு.க.வையும் மக்கள் மன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகின்ற ம.தி.மு.க. கருணாநிதியின் கபட நாடகத்துக்கு துணை போகின்ற தவறை ஒரு போதும் செய்யாது.கருணாநிதியின் வேலை நிறுத்த அறிவிப்பு தமிழர்களை முட்டாள்கள் எனக் கருதிக் கொண்டு நடத்துகின்ற வஞ்சக ஏமாற்று வேலை ஆகும். ம.தி.மு.க. திட்டமிட்டப்படி ஏப்ரல் 23ஆம் தேதி அன்று வேட்பு மனு தாக்கலிலும், அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும்.ஈழத்தில் படுகொலைக்குக் காரணமான இலங்கை அரசுக்கும், அதற்குத் துணை நிற்கும் இத்தகைய அரசுக்கும் கண்டனம் தெரிவிக்க வரும் 24ஆம் தேதி அன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழகம் எங்கும் கறுப்புக் கொடி ஏந்தி அறப்போர் நடத்தவும், படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக அன்று மாலை 6 மணிக்கு தாங்கள் இருக்கும் இடங்களிலேயே தமிழ் மக்கள் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தவும் வேண்டிக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.