Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிதம்பரத்தின் துணையோடு போரை நிறுத்துங்கள்: கருணாநிதிக்கு ராமதாஸ் வேண்டுகோள்

சிதம்பரத்தின் துணையோடு போரை நிறுத்துங்கள்: கருணாநிதிக்கு ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை , வியாழன், 16 ஏப்ரல் 2009 (10:32 IST)
உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் துணையோடு இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் எது நடந்து விடக்கூடாது என்று கடந்த சில மாதங்களாக அஞ்சினோமோ, அந்த கொடுமை சிங்கள இனவெறி போர்ப்படையினரால் அரங்கேற தொடங்கிவிட்டதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. போர் முனையில் நேருக்கு நேர் மோதும் போராளிகளை வெல்ல முடியாமல் திணறுகின்ற சிங்கள படையினர், பாதுகாப்பு வளைய பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ள அப்பாவி தமிழர்கள் மீது, பெருமளவிலான தாக்குதல் நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

சர்வதேச நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள அணுகுண்டுக்கு நிகரான அக்னி குண்டுகளை வீசி உலகில் இதுவரையில் எங்கும் நடந்திராத இன அழிப்பை நடத்த முற்பட்டிருக்கிறார்கள். அங்கு சிக்கித்தவிக்கும் பெண்கள், குழந்தைகளின் அவல நிலை குறித்து விளக்கிட வார்த்தைகளே இல்லை என்று செய்தி ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல்களில் இருந்து அங்கு நிலைமை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

உலகில் எங்கெங்கோ நடைபெறும் கொடுமைகளை கண்டித்து உரக்க குரல் கொடுக்கின்ற இந்திய அரசு, இலங்கையில் நாள்தோறும் தமிழினத்தை கொன்று குவித்து வரும் சிங்கள ராணுவத்திற்கு எதிராக இதுவரையில் ஒருமுறைகூட உரக்க எச்சரிக்கை விடவில்லை என்ற ஆதங்கமும், அதனால் ஏற்பட்டுள்ள கோபமும் தமிழர்களுக்கெல்லாம் இருக்கிறது.

இலங்கை அரசுடன் பேசி வருகிறோம். இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். போரை நிறுத்தச்சொல்லியிருக்கிறோம் என்ற கண்துடைப்பு வேலைகளில்தான் இந்திய அரசு இதுவரை ஈடுபட்டு வந்திருக்கிறது என்று தமிழர்களெல்லாம் பொறுமிக்கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கை தமிழர்களை அரவணைத்து பாதுகாக்க வேண்டிய கடமை பொறுப்பும், பன்னாட்டு சட்டத்தின் கீழ் நேரடியாக தலையிடுவதற்கான உரிமையும், சட்டத்தகுதியும் உள்ள இந்தியா இந்த கடைசி நிமிட நேரத்திலாவது தலையிட்டு போரை நிறுத்தி அங்கே நடக்க இருக்கிற தமிழினப் பேரழிவை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.

48 மணி நேரம் போர் நிறுத்தம் என்ற ஏமாற்று வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டபோது, அது எங்களால் தான் வந்தது என்று மார்தட்டியவர்களுக்கு இப்போது இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றினோம் என்ற பெயரெடுக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மத்திய அரசின் மூத்த அமைச்சராக இடம் பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த சிதம்பரமும், மத்திய அரசை செயல்பட வைத்திருக்கிறோம் என்று இங்கே மார்தட்டிக் கொண்டிருக்கும் தி.மு.க.வும், அதன் தலைவரும் மத்திய அரசு மீது அவர்களுக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி போரை நிறுத்தும்படி இலங்கைக்கு இறுதி எச்சரிக்கை விடச்செய்யவேண்டும். அதன்மூலம் தமிழின பேரழிவைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

இலங்கை தமிழர்களை காப்பதில் மத்திய அரசு இதுவரையில் கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை. இப்போது கிடைத்திருக்கும் இந்த கடைசி சந்தர்ப்பத்தையாவது மத்திய அரசு நழுவ விட்டுவிடக்கூடாது என்று இருவரும் எடுத்துக்கூற வேண்டும்.

தமிழர்களுக்காக எதையும் துறப்போம் என்று பேசியவர் முதலமைச்சர். அவர் எதையும் துறக்க வேண்டாம். இலங்கை தமிழர்களை காப்போம் என்று உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று மத்திய அரசை நோக்கி, இந்த ஆபத்தான நேரத்தில் உரக்க குரல் கொடுத்தால் போதும்.

தேர்தல் நேரம் என்றதும் இங்கே வந்து இலங்கை தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் சிதம்பரத்தையும் உங்களோடு துணைக்கு அழைத்து கொள்ளுங்கள். இருவருமாக சேர்ந்து மத்திய அரசிடம் வாதாடுங்கள். போரை நிறுத்துங்கள். அல்லது முன்பு போல விமான படையை அனுப்பி தமிழர்களை காப்போம். தமிழின பேரழிவை தடுத்து நிறுத்துவோம் என்று இலங்கைக்கு எச்சரிக்கை விட செய்யுங்கள். இதை சாதித்தால், அது வரலாற்றில் பொறிக்கப்படும். இல்லையென்றால் தமிழினம் சபிக்கும் எ‌ன்று ராமதா‌‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil