பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்று கூறியுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேர்தலுக்கு பின்பு அமையும் கூட்டணி குறித்து இதுவரை யாருடனும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத ஓர் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. அந்த பிரதமர் பதவி மீது எனக்கு தனிப்பட்ட ஆசையும் கிடையாது.
தேர்தல் முடிவுக்கு ஏற்படும் கூட்டணி குறித்து யாருடன் பேசவில்லை. தேர்தலுக்கு பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பேசி முடிவு எடுப்போம். அதன் பிறகு ஏற்படும் கூட்டணி மாற்றங்கள் குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறுவது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் அவர் இறையாண்மைக்கு எதிராக பேசமாட்டார்.
இலங்கை தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் படுதோல்வியடைந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.