கடைசி வரை பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு, மத்திய அரசை குறை கூறுவதா? என்று, பா.ம.க.வுக்கு முதலமைச்சர் கருணாநிதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் அறிக்கை :கருணாநிதி தலைமையில் ஏப்ரல் 9ஆம் தேதி அன்று நடந்த 'இலங்கை அரசே போரை நிறுத்து' என்று முழக்கமிட்ட தமிழர்களின் பிரமாண்ட பேரணியின் நிறைவாக உரையாற்றிய முதலமைச்சர் கருணாநிதி, பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு மாறாக - தனது நாட்டை வென்ற அலெக்சாண்டருக்கு முன்னால் போரஸ் மன்னன் கம்பீரமாக நின்று கர்ஜித்ததைக் கண்டு அவனை அலெக்சாண்டருக்கு நிகரான ஒரு மன்னனை போல நடத்த வேண்டும் என்று கூறியதை ஏற்றுக் கொண்டதைப்போல, பிரபாகரனை நடத்த வேண்டும் என்றும்;போர் முடிந்த பிறகு இலங்கையில் எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வு மூலம் அவர்களுக்கு உரிய சம சுதந்திரத்தோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்றும்; குறிப்பிட்டதை இங்குள்ள நெடுமாறன் கும்பல் திசைதிருப்பி பேசிவருவதை விடுதலைப்புலிகளின் தலைவர்கள் கேள்வியுற்று நெடுமாறன் கும்பலை பாராட்டி கொண்டிருக்கிறார்களாமே, உண்மையா?.வரலாறு படிக்காதவர்கள் அல்லது படித்தவர்கள் சொல்லி காதில் வாங்காதவர்கள் வேண்டுமானால் நெடுமாறன் கும்பலைப் பாராட்டி மகிழலாம். பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஜெயலலிதாவுக்கு நன்றிகூட தெரிவிக்கலாம்.விடுதலைப்புலிகள் தமிழகத்தில் இப்படி தவறான பேர்வழிகளின், தவறான பேச்சைக் கேட்டு, தவறான முறைகளை கடைப்பிடித்த காரணத்தால்தான், இலங்கை தமிழர்களின் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராமலேயே இருக்கிறது என்பதை இலங்கை தமிழர்கள் மீது அன்பும், பாசமும் கொண்டுள்ள நடுநிலையாளர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த நடுநிலையாளர்களில் நானும் ஒருவன்.அ.தி.மு.க.வில் கூட்டணி தர்மம் உள்ளது என்றும், தி.மு.க. கூட்டணியில் அது இல்லை என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?அ.தி.மு.க. கூட்டணியில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடனும், ம.தி.மு.க.வுடனும் உடன்பாடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வந்தது.
அதன் காரணமாகத்தான் 3.4.2009 அன்று மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் - அ.தி.மு.க.வுடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு காண்பதற்கும், உடன்பாடு எட்டப்படாத நிலை எழுந்தால் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யவும் கட்சியின் மாநில செயற்குழுவிற்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக காத்துக் காத்துக்களைத்துப்போன வைகோ விரக்தியின் விளிம்பிலே நின்றுகொண்டு, ''கூட்டணி பற்றியோ, தேர்தலை பற்றியோ சிந்திக்கக்கூடிய மனநிலையில் நான் இல்லை'' என்று மனம்நொந்து பேசியது நாளேடுகளில் வெளிவந்தது.
இப்படி நம்பி வந்தவர்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு, மனம் நைந்துபோகிற அளவுக்கு இழுபறி நிலையை வேண்டும் என்றே நீட்டித்து வேடிக்கை பார்ப்பதைத்தான் கூட்டணி தர்மம் என்று டாக்டர் ராமதாஸ் கூறுகிறாரோ என்னவோ?
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் தலைமையிலான அரசு ஏதும் செய்யவில்லை என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?
ஐந்தாண்டு காலம் தொடர்ந்து மத்திய அரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலே அங்கம் வகித்து இரண்டு முக்கிய இலாக்காக்களின் அமைச்சர் பதவிகளை பெற்று அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்திலும், கூட்டணியில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கையும், கூட்டணி அரசின் வழிகாட்டும் தலைவர் சோனியாகாந்தியையும் சந்தித்து தனக்கு தேவையானதைப் பற்றி பேசியபோதும்; டாக்டர் ராமதாஸ் அவரது இந்தக் கருத்தை தெரிவித்திருப்பாரேயானால் அவரது நேர்மையையும் தைரியத்தையும் பாராட்டி இருக்கலாம்.
கடைசிகணம் வரை பதவி சுகத்தை கரும்பாகச் சுவைத்துவிட்டு, இப்போது காங்கிரஸ் அரசு மீது புழுதிவாரித் தூற்றுவதை, தமிழகத்து மக்கள் நிச்சயமாகப் பதம் பிரித்துப் பொருள் புரிந்து கொள்வார்கள். பாராளுமன்றத் தேர்தலையொட்டி அவர் ஓதுவதை எல்லாம் `வேதம்' என்றா ஒத்துக்கொள்ள முடியும்?
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லையா?
இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பதை நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் நன்றாகவே அறிவார்கள்.
2008ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் மத்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை அரசின் பாசில் ராஜபக்சே தலைமையில் வந்த தூதுக் குழுவினரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வழிகாட்டும் தலைவர் சோனியாகாந்தி என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது; இலங்கை தமிழர் பிரச்சனைகள் சூழ்நிலைகள் குறித்தும், மத்திய அரசு எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்தும் என்னிடம் விளக்கமாக எடுத்துரைத்ததோடு; அதுபற்றி மேலும் விரிவாகப் பேசுவதற்காக பிரணாப் முகர்ஜி சென்னை வந்து என்னிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் பேசினார்.
அவர் சென்னை செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துவிட்டு கூறியதாவது :
''நார்வே நாட்டின் முயற்சியின் பேரில் ஏற்பட்ட சண்டை நிறுத்தம் தொடருவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தினார். இலங்கை சிறுபான்மையினர் பிரச்சனைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்று பாராளுமன்றத்தில் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன். போர் பகுதிகளில் அவதிப்படும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்திய அரசின் மூலமாக மனிதாபிமான உதவிகள் அளிக்க இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது.
இலங்கையின் வடக்கு பகுதியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களைத் தொடர்ந்து கிடைத்திடச் செய்ய தேவையான உதவிகளையும், வசதிகளையும் இலங்கை அரசு வழங்கும். எனது வலியுறுத்தலின் பேரில் அரசியல் தீர்வை நிறைவேற்றும் பொறுப்பை அதிபர் ராஜபக்சே ஏற்றுக் கொள்வார் என்று சிறப்பு தூதர் உறுதியளித்தார். இதனை முடிந்த அளவு விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன்.
கிழக்கு மாகாணத்திற்கு அதிகபட்ச அதிகாரங்கள் அளிக்கப்படுவது அவசியம் என்றும், அப்போதுதான் நம்பிக்கை ஏற்படும் என்றும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பகுதிகளில் மறுவாழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டேன். பலமுறை இலங்கை தலைவர்களுடன், பிரதமரும், நானும் பேசும்போது இந்தப் பிரச்சனைக்கு ராணுவத் தீர்வு கூடாது; பேச்சு வார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்றும், அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்''.
இலங்கை தமிழர் பிரச்சனையில்; ராணுவ ரீதியாக தீர்வுகாண முடியாது - போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் - அமைதியான சூழலில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் - பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களுக்குத் தேவையான மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - என்பதுதான் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாடு. இதன் அடிப்படையில் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்கு நேரிலேயே சென்று ராஜபக்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்திய விபரங்கள் அனைத்தும் ஏடுகளில் உள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிட நமது மாநில அரசு எடுத்த முயற்சிகள் மட்டுமின்றி மத்திய அரசும் இரண்டு முறை மருந்து. உணவுப் பொருட்களை அனுப்பியதுடன், மூன்றாவது முறையாக மருந்துகளையும், மருத்துவக் குழுவினரையும் அனுப்பி வைத்தது.
1.4.2009 அன்று சோனியாகாந்தி எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், நம்முடைய பிரதமர் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரின் சார்பாக இலங்கையில் அண்மையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை விவரித்திருப்பதைப் பற்றி நானும் உங்களுக்கு உறுதிகூற விரும்புகிறேன். கடந்த முப்பதாண்டு காலமாக காங்கிரஸ் கட்சி இலங்கை தமிழர்களின் நல்வாழ்வுக்காக துணை நின்று வருவதையும், ஒன்றுபட்ட இலங்கைக்கு உட்பட்டு இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்பதை தொடர்ந்து வருகின்ற இலங்கை அரசுகளிடம் வலியுறுத்தி வருவதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் போர், அதன் காரணமாக அங்குள்ள தாய்மார்கள், குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவித் தமிழர்கள் அனுபவித்து வரும் பெரும் துயரங்கள், நம்மை மிகுந்த கவலைக்கு ஆளாக்கியுள்ளது. அவர்களை பாதுகாக்கவும், அவர்களின் நலன்களைப் பேணவும் தேவையான முயற்சிகள் அனைத்தையும் இலங்கையின் அதிகார வர்க்கம் மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
உள்ளபடியே அதற்கான முதல்கட்டமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். நமது பிரதமர் ஏற்கனவே கடிதத்தில் தெரிவித்துள்ளபடி நமது அரசு இலங்கை அரசுடன் பல்வேறு வகையான கருத்துருக்களின் மீது தொடர்பு கொண்டு வருகிறது. குறிப்பாக போர் நிறுத்தத்தைப் பற்றியும் தொடர்பு கொள்ளப்பட்டு வருகிறது'' என்று விளக்கமாக தெரிவித்திருக்கிறார்.
பதினைந்தாவது பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்திய தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ''இலங்கையின் ஒன்றுபட்ட அமைப்பிற்குள், அங்கு வாழும் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக, தமிழ் மக்கள் சமஉரிமைகளைத் துய்த்திட உறுதி செய்யப்படுவதற்கு ஏற்ப - அங்கே நிலவிவரும் இடர்பாடுகளுக்கு மதிக்கத்தக்க தீர்வு காணப்பட வேண்டும் என்பது தான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நீண்ட நாட்களாக கொண்டிருக்கும் நடவடிக்கை குறிப்பாகும்.
அரசியல் ரீதியான பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு அடிப்படையாக அமைந்திருக்கும் 1987-ம் ஆண்டின் இந்திய - இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, சம்மந்தப்பட்ட தரப்பினர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் உதவிடும்'' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கபட நாடகம் என்று டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்; அதையும் வெளியிட இங்கே சில எரிச்சல் ஏடுகள் தயாராகவே இருக்கின்றன என்று கருணாநிதி கூறியுள்ளார்.