அயல்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்துள்ளதாக சென்னை பாதிரியார் உள்பட 3 பேர் மீது மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரபேட்டையை சேர்ந்த சண்முகவேல் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணனிடம் இன்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னை அண்ணாசாலை, தியாகராய நகர் ஆகிய இடங்களில் அயல்நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் நிறுவனம் நடத்தி வந்தவர் பாதிரியார் ஸ்டீபன் லூயிஸ்.
இவர் எனது மகன்கள் சுகுமாறன், சுரேஷ்குமார் ஆகியோருக்கும் அருள் என்பவருக்கும் ஐரோப்பிய நாடுகளான கனடா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் பைபிள் மெடிலின் என்ற அறக்கட்டளை மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறினார். அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் என்றார். ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வீதம் 3 பேருக்கும் தவணை முறையில் ரூ. 6 லட்சம் கட்டினோம். அதற்கு ரசீதும் போட்டு தந்தார்.
பல மாதங்கள் சென்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. நீங்கள் கிறிஸ்தவர்களாக மாறுங்கள். உங்கள் வீடு தேடி வேலை வரும் என்று ஆசை காட்டினார். அதை நம்பி நாங்களும் மதம் மாறினோம். அதன் பின்னரும் அவர் வேலை பெற்று தரவில்லை. மாறாக எங்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.
ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தை திருப்பி தருவதாக கூறி போலி காசோலை தந்தார். அவரிடம் சென்று அடிக்கடி பணம் கேட்டோம். அதற்கு அவர் தனக்கு பெரிய புள்ளிகளோடு தொடர்பு உள்ளது. பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதுவரை அவர் பணம் தரவில்லை.
எங்களை போல 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இது போல ஆசை காட்டி மோசடி செய்துள்ளார். ரூ. 5 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று புகார் கூறியுள்ளார்.
இதேபோல் சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவர் கொடுத்த புகாரில், எண்ணூரில் வசித்து வரும் நான் தையல் வேலை செய்து வருகிறேன். நான் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் என்னிடம் தொடர்பு கொண்டு அயல்நாட்டில் தையல் வேலை செய்தால் கைநிறைய சம்பளம் கிடைக்கும் என்று கூறினார்.
அத்துடன் அவர் என்னை சைமன்பால் என்ற பாதிரியாரிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். பாதிரியார் சைமன்பால் என்னை ஸ்டீபன்லூயி என்பவரிடம் அழைத்து சென்று அயல்நாட்டில் வேலைக்கு சேருவதற்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும் என்று கூறினார்கள்.
நான் அவர்களிடம் ரூ.1 லட்சத்துக்கு 74 ஆயிரம் வரை கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை என்னை அயல்நாட்டிற்கு வேலைக்கு அனுப்பவில்லை. இது பற்றி கேட்டபோது சரியான பதில் அவரிடம் இருந்து கிடைக்காததால் நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, பணம் தர முடியாது என்று பதிலளித்ததோடு என்னை மிரட்டினார்கள் என்று புகாரில் கூறியிருந்தார்.
இதேபோல் ஊரப்பாக்கம் குமார், பம்மல் லூர்துசாமி, சாமுவேல், கணேஷ் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் பாதிரியார் ஸ்டீபன்லூயிஸ், உதவியாளர் சைமன்பால் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளனர்.
இது குறித்து விசாரிக்க தியாகராய நகர் துணை ஆணையருக்கு முத்து சாமிக்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.