''
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலக முன் வந்தார்கள்; ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள்தான் பதவி விலக முன்வரவில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் அண்மையில் பதவி விலகியிருக்கிறார்கள்.அந்த மூவரும் தங்களது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுத்தார்கள்? கட்சித் தலைமையிடம் கொடுக்கவில்லை. முறைப்படி சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்து விலகல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்கள். அவரும் பதவி விலகலை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இதனால் உடனடியாக அந்த மூவரும் பதவி இழந்திருக்கிறார்கள்.ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக, தி.மு.க. எம்.பி.க்கள் யாரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தார்கள்?. மக்களவை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை மக்களவைத் தலைவரிடம் கொடுக்க வேண்டும்; அது தான் மரபு. கொடுக்க வேண்டிய இடம் டெல்லி. ஆனால், அன்றைய தினத்தில் டெல்லியில் இருந்த தி.மு.க. எம்.பி.க்களை டி.ஆர்.பாலு விமானத்தில் சென்னைக்கு அழைத்து வருகிறார். தி.மு.க. தலைவரைச் சந்தித்து அவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.பதவி விலகல் கடிதத்தை கொடுக்க விரும்புகிறவர்கள் சென்னையில் இருந்தால், விமானத்தில் டெல்லிக்குப் போய் அங்கு மக்களவைத் தலைவரைச் சந்தித்து விலகல் கடிதத்தை முறைப்படி கொடுக்க வேண்டும்.ஆனால், அன்றைய தினத்தில் டெல்லியில் இருந்த தி.மு.க. எம்.பி.க்கள் அங்கே அவைத் தலைவரிடம் கடிதத்தைக் கொடுக்காமல், சென்னைக்கு அழைத்து வரப்பட்டு கட்சித் தலைவரிடம் கொடுத்திருக்கிறார்கள். கட்சித் தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தால் அதன் விளைவு என்ன என்பது யாருக்கும் தெரியாததல்ல. யாரும் அறியாததும் அல்ல.தமிழக எம்.பி.க்கள் பதவி விலகுவது என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபோது, அதை முழு மனதோடு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரித்திருக்கிறது. தி.மு.க. எம்.பி.க்களின் பதவி விலகல் கடிதம் அவைத் தலைவரிடம் எந்த நாளில், எந்த நேரத்தில் சேர்க்கப்படுகிறதோ அதே நாளில் அதற்கு அடுத்த நொடியிலேயே பா.ம.க. எம்.பி.க்களின் பதவி விலகல் கடிதம் அவைத் தலைவரிடம் சேர்ப்பிக்கப்படும் என்று பலமுறை நான் செய்தியாளர்களிடம் தெரிவித்து வந்திருக்கிறேன். இது அனைத்து பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது.
தி.மு.க. எம்.பி.க்கள் முறைப்படி பதவி விலகல் கடிதத்தை அவைத் தலைவரிடம் அன்றைய தினத்தில் அளித்திருந்தால், டெல்லியில் இருந்து பா.ம.க. எம்.பி.க்களும் அதற்கு அடுத்த நொடியே தங்களது பதவி விலகல் கடிதத்தை அளித்திருப்பார்கள். ஆனால், முறைப்படி பதவி விலகல் கடிதத்தை அவைத் தலைவரிடம் கொடுக்காமல், அதனை கட்சித் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டது வெறும் நாடகம். அப்படி கட்சித் தலைவர் வாங்கி வைத்துக் கொண்டதால், நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது என்று சொல்லிக்கொண்டு, இப்போது பா.ம.க. மீது வீண் பழி போட்டு அரசியல் ஆதாயம் தேட முற்படுவது கடைந்தெடுத்த அரசியல் பித்தலாட்டமாகும்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார். அவர் இதில் மிகவும் குழம்பிப் போயிருக்கிறார்.
இன்னொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையில் அண்டையிலே உள்ள நாடு (இந்தியா) குறுக்கிட்டு என்ன செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்? என்று கடந்த ஆண்டு அக்டோபரில் செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு விடையளித்த தி.மு.க. தலைவர், ``பங்களாதேஷ் எப்படி வந்தது''? என்று சூடாக பதிலளித்திருக்கிறார். ஆனால், இன்றைக்கு என்ன சொல்கிறார்.
இந்தியா ஒரு இறையாண்மை மிக்க நாடு, இலங்கையும் இன்னொரு இறையாண்மை மிக்க நாடு. எனவே, அந்த நாட்டுப் பிரச்சனையில் இந்தியா ஓரளவுக்குத்தான் தலையிட முடியும். ஓரளவுக்குத்தான் அழுத்தம் கொடுக்க முடியும் என்று கூறுகிறார்.
இப்படி முன்னுக்குப் பின் முரணாகவும், குழப்பத்திலும் உள்ள தி.மு.க. தலைவர் தேர்தல் வந்ததும் மக்களின் கோபத்திலிருந்து தப்பிக்க, பா.ம.க. மீதும் மற்ற கட்சிகள் மீதும் பழி சுமத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்.
இலங்கையிலே போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதை விட்டு விட்டு, அதற்காக வாதாடுவதை விட்டுவிட்டு, போரினால் அடிபட்டு விழுகிற தமிழர்களுக்கு உதவுகிறோம் என்று சொல்கிறார். அடிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னால், அடிபட்டவர்களுக்கு மருந்து தடவுகிறோம் என்கிறார்.
எனவே, தி.மு.க. அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளெல்லாம், ``சுகம் வரும், ஆனால் ஆள் தப்பாது'' என்ற கதையாகத்தான் இருக்கிறது. இதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது. வரும் தேர்தலில் தெளிவான தீர்ப்பை வழங்குவார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.