தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்: கருணாநிதி
சென்னை , திங்கள், 30 மார்ச் 2009 (15:34 IST)
''
தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க சொற்பொழிவாளர்கள் கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை தி.மு.க ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.தி.மு.க.வும், காங்கிரசும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்கும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடெறாது.இந்த கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்சனைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.மத்திய, மாநில அரசுகள் ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்ய முற்படுவார்கள். அவற்றை முறியடிக்கும் வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.தமிழ் ஈழத்தை தி.மு.க ஏற்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்கிறார்கள். ஜனநாயக ரீதியில் இலங்கைத் தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.இவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.