உச்ச நீதிமன்ற அனுமதியுடன் நார்த்தாமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் திருச்சி காவல்துறை துணை தலைமை ஆய்வாளர் (டி.ஐ.ஜி) உள்பட 170 வீரர்கள் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதனிடையே உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்ததால் 2 ஆண்டாக நடக்கவில்லை.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி நார்த்தாமலை ஊராட்சி தலைவர் மாரிக்கண்ணு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 2008 ஜனவரி 15ஆம் தேதி அளிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி ஜல்லிக்கட்டு நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி நார்த்தாமலையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. புதுக்கோட்டை மாவட்ட காவல்துணை கண்காணிப்பாளர் மூர்த்தி மேற்பார்வையில், ஆர்.டி.ஓ பாஸ்கரன், கீரனூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் ஜல்லிக்கட்டு நடந்தது.
தமிழகம் முழுவதும் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் 170 வீரர்கள் காளைகள் முட்டி காயமடைந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று மற்றொரு காளையை முட்டி வீழ்த்தியது. இதில் அதே இடத்தில் இந்த காளை இறந்தது.
ஜல்லிக்கட்டை மேற்பார்வையிட சென்ற மத்திய மண்டல டி.ஐ.ஜி பாலசுப்ரமணியன், அங்கிருந்து கிளம்புவதற்காக காரை நோக்கி நடந்தார்.
அப்போது அங்கு சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை வேகமாக உரசிச் சென்றதில், டி.ஐ.ஜி பாலசுப்ரமணியன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை காவல்துறையினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.