தெய்வத்துடனும், மக்களுடனும்தான் கூட்டணி: விஜயகாந்த் பிரச்சாரம்
கன்னியாகுமரி , வியாழன், 26 மார்ச் 2009 (14:01 IST)
தெய்வத்துடனும், மக்களுடனும் தான் கூட்டணி வைத்துள்ளேன் என்று கன்னியாகுமரியில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்ற விஜயகாந்த், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இன்று பிரச்சாரம் செய்தார்.அப்போது அங்கு திரண்டு நின்ற தொண்டர்கள் மத்திய பேசிய அவர், இன்று முதல் தேர்தல் முடியும் வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய உள்ளேன் என்றார்.மக்களை நம்பி தே.மு.தி.க. முதன்முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது என்று பேசிய விஜயகாந்த், தெய்வத்துடனும், மக்களுடனும்தான் கூட்டணி அமைத்துள்ளேன் என்றார்.பீகாரில் ஒரு தேசிய கட்சிக்கு 3 சீட் தான் வழங்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், தேசிய கட்சிகளின் நிலைமை அதுதான் என்றும் மாநில கட்சிகளை நம்பித்தான் தேசிய கட்சிகள் உள்ளது என்றார்.தொடர்ந்து கடியாபட்டினம், முட்டம், ராஜமங்களம், மணற்குடி, சுசீந்திரம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். பிற்பகல் 3 மணிக்கு கொட்டாரத்திலிருந்து பிரச்சாரத்தை துவக்கும் விஜயகாந்த் 4.30 மணியளவில் நாகர்கோயில், வடசேரி சென்று 5 மணிக்கு தக்கலை, வேர்கிளம்பி ஆகிய இடங்களிலும், 8.30 மணிக்கு மார்த்தாண்டத்தில் பிரச்சாரத்தை முடிக்கிறார். நாளை மறுநாள் அவர் திருநெல்வேலி தொகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.