வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் 47 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பணிக்கு திரும்பினர். இதேபோல் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பினர்.
கடந்த மாதம் 19ஆம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இதையடுத்து வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் மீது தடியடி நடத்த காரணமாக இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளை தற்காலிக பணி நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தங்களது போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைப்பதாகவும், வரும் 23ஆம் தேதி (இன்று) முதல் பணிக்கு திரும்புவதாகவும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால்கனகராஜ் கூறியிருந்தார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று பணிக்கு திரும்பினர். இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் தொடங்கியது.
அதேபோல் மதுரை உயர் நீதிமன்ற கிளையிலும் வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பியதையடுத்து, நீதிமன்ற பணிகள் தொடங்கியது. மாநிலம் முழுவதும் இன்று வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்பினர்.
கடந்த 47 நாட்களாக நடந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.