ஈழத் தமிழர் பிரச்சனையில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை அருகே தே.மு.தி.க. தொண்டர் ஒருவர் தீக்குளித்து மரணம் அடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் பலுவான் நகரை சேர்ந்தவர் பாலசுந்தரம் (40). சமையல் தொழிலாளியான இவர், தே.மு.தி.க.வில் உறுப்பினராகவும் இருந்து வந்தார். இவரது மனைவி செல்வம். இவர்களுக்கு பார்த்திபன், நடனசுந்தரம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
தே.மு.தி.க. சார்பிலும், ஈழத்தமிழ் உணர்வாளர்கள், பிற அமைப்புகள் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பாலசுந்தரம் கலந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் அவர் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்யும் காங்கிரசுடன் கூட்டணி வைக்கக்கூடாது என்று மற்ற தொண்டர்களிடம் ஆவேசமாக பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் தீ பரவி அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதி தே.மு.தி.க. நிர்வாகிகள், ஈழத்தமிழ் உணர்வாளர்கள் விரைந்து சென்று பாலசுந்தரத்தின் உடலை எரிக்கக்கூடாது. இறுதி அஞ்சலிக்காக வைக்க வேண்டும் என்று கூறி உடலை எடுத்துச்சென்ற உறவினர்களை தடுத்தனர். பின்னர் நடுவழியிலேயே உடல் இறக்கி வைக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் கீரமங்கலம் காவலர்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பாலசுந்தரத்தின் உடலை எரிக்கக்கூடாது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் நாளை (இன்று) வர உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து பாலசுந்தரத்தின் உடல் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு உடல் தகனம் நடைபெறும் என தெரிகிறது.