வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சென்னையில் மாபெரும் கண்டனப் பேரணி நடத்தப்போவதாக வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை 11 மணியளவில் மன்றோ சிலை அருகில் இருந்து பேரணி புறப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற சங்கத் தலைவர் பால் கனகராஜ் பேரணியை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இருந்து சென்னை வந்துள்ள பல்லாயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர். மேலும் இந்த பேரணியில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர்களும், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் மூத்த வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.
பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே முடிவடைந்தது. பேரணியை வழிநெடுக கண்காணிப்பு கேமரா அமைத்து காவலர்கள் கண்காணித்தனர். ஊர்வல பாதையில் கறுப்புக்கொடி கட்டப்பட்டிருந்தது.
பேரணி முடிவில் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், இது பேரணி அல்ல, இது பெருமைக்குரிய அணி. சென்னையில் இதுபோன்ற பேரணி நடத்தியது மாபெரும் சரித்திரம்.
கடந்த மாதம் 19ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது அராஜகத்தின் உச்சக் கட்டம். வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்த காரணமாக இருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது அவர்கள் மீது குற்ற நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட 2 காவல்துறை அதிகாரிகளை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
எங்களது போராட்டம் வடிவம் மாறலாம். ஆனால் போராட்டங்கள் தொடரும். அது எந்தவிதமான போராட்டம் என்பதை வழக்கறிஞர்கள் பாதுகாப்பு கூட்டுக்குழு கூடி முடிவு செய்யும் என்றார் பால் கனகராஜ்.