இலங்கையில் சிங்கள ராணுவத்தினரால் தாக்குதலுக்குள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்காக அஇஅதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினரால் அங்கு வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க வலியுறுத்தியும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கோரியும், அஇஅதிமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் முடிவில் ஜெயலலிதா இதனை வெளியிட்டார்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார்.
இன்று காலையில் உண்ணாவிரதம் தொடங்கிய போது, இலங்கை தமிழர்களுக்கு நிதி திரட்டுவதற்காக வைக்கப்பட்ட உண்டியலில் 5 லட்சம் ரூபாயை ஜெயலலிதா செலுத்தினார்.
மாலை 5 மணியளவில், உண்ணாவிரத முடிவில் பேசிய ஜெயலலிதா, இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்படும் நிதிக்கு அஇஅதிமுக சார்பில், அதன் பொதுச் செயலாளர் என்ற முறையில் மேலும் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று கூறினார்.
தவிர மாநிலம் முழுவதும் தங்கள் கட்சியினர் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக திரட்டப்பட்டுள்ள நிதி சென்னை வந்து சேர்ந்ததும், மொத்தமாகச் சேர்த்து செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
மேடையில் ஜெயலலிதாவிடம் ஆசிபெற்ற பள்ளிக்குழந்தைகள் இருவர் தாங்கள் உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை இலங்கைத் தமிழர்களுக்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்தினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவிற்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.