''
ஈழத் தமிழர்கள் மீது மத்திய அரசுக்கும், தமிழகத்தில் ஆட்சியிலுள்ள தி.மு.க அரசுக்கும் உண்மையான அக்கறை இல்லை'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.
இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டுள்ள ஜெயலலிதா, உண்ணாவிரத மேடையில் பேசுகையில் மேற்கண்டவாறு மத்திய, மாநில அரசுகள் மீது குற்றம்சாற்றினார்.அவர் மேலும் பேசுகையில், இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசும், அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் தவறி விட்டன. மத்திய அரசுக்கும், மாநிலத்தில் ஆட்சியிலுள்ள தி.மு.க அரசுக்கும் ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறையில்லை.மத்தியில் ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உடனடியாக மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை உடனடியாக அனுப்ப தவறிவிட்டது. ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து, உடைகள் போன்ற நிவாரண பொருட்களை மத்திய அரசு ஏன் அனுப்பவில்லை. அ.இ.அ.தி.மு.க சார்பில் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு வரும் இலங்கை தமிழர்களுக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கையில் நடைபெற்று வரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும், போரை நிறுத்தவும், மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தரும் வகையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.கடந்த ஆண்டு 2008 ஆம் ஆண்டு இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களை அளித்துக்கொண்டு இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. மத்திய அரசு இந்த செய்திகளை மறுக்கவில்லை. இந்திய ராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டதாக செய்திகள் வந்தன. இதற்கு மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. மாநில அரசும் கேள்வி எழுப்பவில்லை. இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை இந்திய அரசின் ஒப்புதலோடு நடந்துகொண்டிருக்கிறது. இதில் தி.மு.க அரசுக்கும் தொடர்பு உண்டு. ஒரு நாடு மற்றொரு நாட்டுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது வழக்கமான ஒன்றுதான்.ஆனால் இலங்கைக்கு அளிக்கப்படும் பயிற்சி யாருக்காக அளிக்கப்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக பயிற்சி அளிக்கப்படுகிறது.இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை அளித்திருக்கிறது. அதிநவீன ஆயுதங்களை அளித்துள்ளது. பயிற்சிகளையும் அளித்துள்ளது. தமிழர்களின் காவலர் என்று சொல்லும் கருணாநிதி, காங்கிரஸ் கட்சிக்கு ஏன் ஆதரவு தருகிறார்.இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் என் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். இலங்கையில் உள்ள தமிழர்கள் அங்குள்ள சிங்களவர்களை போல் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தமிழர்களின் உரிமைக் குரலை நாங்கள் அங்கீகரிக்கிறோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம், கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை ஆகிய இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய போராட்டத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இலங்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட, சுய நிர்ணய அதிகாரம் பெற்ற தமிழர் நாடு வேண்டும் என்ற அவர்களின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தை எதிர்க்கிறோம்.
ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இறக்க காரணமான திசை மாறிப்போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இலங்கை அதிபருடன் நம் பிரதமர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அங்கு தமிழர்களின் மீது நடத்தப்படும் இனப்படு கொலையை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்று நான் கருணாநிதிக்கு ஆலோசனை கூறினேன்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தமிழக மக்கள் அனைவரும் பிரதமர் அலுவலகத்திற்கு தந்திகள் அனுப்ப வேண்டும் என்றார். பின்னர் பிரதமரை வற்புறுத்த, மத்திய ஆளும் கூட்டணியிலிருந்து விலக வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்யத்தயார் என்று அறிவித்தார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தார். ஆனால் நாடாளுமன்ற மக்களவை தலைவருக்கோ, அல்லது மாநிலங்களவைத் தலைவருக்கோ அக்கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக அவர் நிர்ணயித்த கெடுவான கடைசி தேதியை முடிவுக்கு வரவிட்டு, பின்னர் அந்த ராஜினாமா கடிதங்களை தானே கிழித்து போட்டு விட்டார்.
திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர், இந்திய நாட்டிற்கு எதிராக பேசியதற்காக கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இந்த இரு இயக்குனர்களும் முதலமைச்சர் கருணாநிதியால் சென்னையில் துவக்கப்பட்ட மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவார்கள்.
எந்த வார்த்தைகள் அவர்களை இன்று சிக்கலில் மாட்டிவிட்டதோ, அவையாவும் முதலமைச்சர் கருணாநிதியின் ஆசியும் ஒப்புதலும் பெற்றவை தான். இன்று நாம் உண்ணாவிரதம் இருப்பதினால், பசியினால் வாடும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப்போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் ஒரு அடையாளமே. இந்த உண்ணாவிரதத்தின் மூலம், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் துயர நிகழ்வுகள் குறித்து, தமிழ்நாட்டு மக்கள் மிகவும் கவலை அடைந்து இருக்கிறார்கள் என்பதையும், இது போன்ற சம்பவங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடந்து கொள்கின்ற விதம், தமிழக மக்களை வருத்தம் அடையவைத்திருக்கிறது என்பதையும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தெரியப்படுத்துகிறோம்.
இங்கு இலங்கைத் தமிழர்களுக்காக அ.தி.மு.க. சார்பில் நிதி திரட்டப்படுகிறது. உண்டியலில் ரூ. 5 லட்சம் செலுத்தி தொடங்கி வைத்திருக்கிறேன். நீங்கள் முடிந்த அளவுக்கு தராளமாக நிதி அளியுங்கள். ஒரு அசட்டு தைரியத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி சேர்ந்து இருக்கிறது. வருகிற தேர்தலில் மக்கள் இந்த கூட்டணிக்கு சரியான பதில் தரப் போகிறார்கள். தி.மு.க.வும், காங்கிரசும் இதை உணர்வார்கள் என்று ஜெயலலிதா பேசினார்.