கருணாநிதிக்கு ஓய்வு கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர் : ஜெயலலிதா
சென்னை , வெள்ளி, 6 மார்ச் 2009 (15:41 IST)
''
அண்ணாவின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு அவர் உருவாக்கிய தி.மு.க.வை குடும்பமாக மாற்றி, தன் குடும்ப வளத்தை பெருக்கி கொண்ட சுயநலவாதி கருணாநிதிக்கு அரசியலிலிருந்து நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடவுளின் எதிரியாகவும் தீய சக்தியாகவும் கருதப்படுபவரை சாத்தான் என்று அழைப்பது உண்டு. அவ்வாறு எம்.ஜி.ஆரால் தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்டவர் கருணாநிதி.சாத்தான் சாதனை செய்ததாக சரித்திரம் இல்லை. தான் ஏதோ சாதனைகள் செய்ததாக கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் கூறியிருக்கிறார் கருணாநிதி. காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியது, கச்சத்தீவை தாரை வார்க்க சம்மதித்தது என பல துரோகங்களை அவர் தமிழகத்திற்கு இழைத்துள்ளார். இந்த துரோகங்களைத்தான் அவர் சாதனைகள் என்கிறார் போலும். கடுமையான மின்வெட்டு, விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி, தொழிலாளர்கள் வேலையிழப்பு, தொழில் முடக்கம், சட்டம்-ஒழுங்கு சீரழிவு, உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்புமின்மை, வேளாண் உற்பத்தி பாதிப்பு என மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இவற்றை தீர்க்க கருணாநிதி ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா?உருப்படியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அவர் எடுப்பதாக தெரியவில்லை. 13-வது வயதில் இருந்து 85 வயது வரை எழுதுகிறேன் எழுதுகிறேன் எழுதிக் கொண்டே இருக்கிறேன் என்று கருணாநிதி கூறுகிறார். சுரண்டுகிறார், சுரண்டுகிறார் சுரண்டி கொண்டே இருக்கிறார் என்று மக்கள் நினைப்பது தூதிபாடிகளின் மத்தியில் இருக்கும் அவருக்கு தெரிய வாய்ப்பில்லை.பொதுவாழ்வு பொதுவாழ்வு என்று சொல்லி பொதுமக்களின் பணத்தை சுரண்டி விமானங்கள் வாங்கும் அளவுக்கு கருணாநிதி தன் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம். அவரால் அவரது குடும்பம்தான் வளம் பெறும். தமிழகம் வளம் பெறுவதற்கான வாய்ப்பு கருணாநிதி ஆட்சியில் துளியும் இல்லை.பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாக கூறி அவருடைய கொள்கைகளை குழிதோண்டி புதைத்த மஞ்சலாடை மாமுனி, காஞ்சிப் பாசறையில் வளர்ந்ததாக கூறி அண்ணாவின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு அவர் உருவாக்கிய தி.மு.க.வை குடும்பமாக மாற்றி, தமிழ், தமிழினம், தமிழ் பண்பாடு என்று சொல்லி தன் குடும்ப வளத்தை பெருக்கி கொண்ட சுயநலவாதி கருணாநிதிக்கு அரசியலிலிருந்து நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள். தான் நிரந்தர ஓய்வு பெற நினைப்பதும், நான் ஆட்சிக்கு வருவதும் நடக்கவே நடக்காது என்ற கருணாநிதியின் கனவு காணல் நீராவது உறுதி என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.