கோடை முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் தற்போது உள்ளதைப் போலவே எவ்வித தடையுமின்றி மின்சாரத்தை முறையாக தொடர்ந்து வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலே மின் பற்றாக்குறை வரும் என்பதைப் போலவும், கோடைக்காலம் வரை மின்வெட்டு நீடிக்கும் என்பதைப் போலவும் ஒரு சில ஏடுகளில் செய்திகள் வெளி வந்துள்ளன. இது முற்றிலும் தவறான செய்தியாகும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சென்னை மாநகரம், அதன் புறநகர் பகுதிகளிலே உள்ள அனைத்து வீடுகளுக்கும் தடை இல்லாமல் மின்சாரம் தற்போது வழங்கி வருகிறது.
அதைப்போலவே மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 22 மணி நேர மின்சாரமும், விவசாய மின் இணைப்புகளுக்கு 10 மணி நேர மும்முனை மின்சாரமும் வழங்கப்படுகிறது. விவசாய மின் இணைப்புகளுக்கு மட்டும் பகலில் 6 மணி நேரம், இரவில் 4 மணி நேரம் என இரண்டு கட்டங்களாக பிரித்து மின்சாரம் வழங்கப்படுகிறது.
வரும் கோடை முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் தற்போது உள்ளதைப் போலவே எவ்வித தடையுமின்றி மின்சாரத்தை முறையாக தொடர்ந்து வழங்கிட அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு மின்சார வாரியம் உறுதியாக மேற்கொண்டுள்ளது. எனவே சில ஏடுகளில் வெளிவந்திருப்பதைப்போல கோடை காலத்தில் மின்வெட்டு இருக்கும் என்ற செய்தி உண்மைக்கு மாறானது.
மாணவர்களின் தேர்வு காலம் என்பதை மனதிலே கொண்டு, அவர்கள் தேர்வு எழுதுகின்ற நேரங்களிலும், மேலும் மாலை, இரவு நேரங்களில் தேர்வுக்கு படிப்பதற்கான நேரங்களிலும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மின்வெட்டு ஏற்படாமல் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். எனவே வீண் வதந்திகளையும், விஷமச் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று பொதுமக்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.