ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்
சென்னை , வியாழன், 26 பிப்ரவரி 2009 (09:42 IST)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாக அ.இ.அ.தி.மு.க. சார்பில், காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திலும், சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்திலும் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளன.
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் தேனாம்பேட்டை காவல்துறை உதவி ஆணையரிடம் நேற்று மாலை புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நான், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் அலுவலக பொறுப்பாளராக பணிபுரிகிறேன். 25ஆம் தேதி அன்று (நேற்று) நான் அலுவலக பணியில் இருந்தபோது ஜெயலலிதா பெயருக்கு தபால் மூலம் கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தின் மேல் உரையில் அனுப்புனரின் பெயரோ, முகவரியோ இல்லை.ஆனால், அந்த கடிதத்தில், 'புரட்சி புலி இயக்கம்- தமிழ் இனத்தை அழிக்கும் உன் வீட்டை தரைமட்டமாக ஆக்குவேன், வெடி வைப்பேன், உன் அலுவலகத்தில் 'பைக் பாம்' வைப்பேன், சில நாளில் நீ, உன் வீடு காலி' இப்படிக்கு சி.மோகன் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.இந்த கடிதத்தின் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறும், ஜெயலலிதாவுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.இதுபோன்ற புகார் மனுக்களை அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலர் டி.ஜெயக்குமார், அரசு முதன்மை செயலாளரிடமும், சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திலும், சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்திலும் கொடுத்தார். இந்த புகார் மனுக்கள் மீது போலீசார் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர்.ஜெயலலிதா வீட்டுக்கு வந்த கடிதத்தில், `24352770' என்ற தொலைபேசி நம்பரும் எழுதப்பட்டிருந்தது. கடிதத்தில் இருந்த தொலைபேசி நம்பரை வைத்து அதற்கான முகவரியை ஆராய்ந்ததில், சென்னை தியாகராய நகர் தாமஸ் சாலையில் வசிக்கும் சி.மோகன் என்பவரது முகவரியை கண்டறிந்ததாகவும், அந்த முகவரியில் உள்ள வீட்டில் விசாரித்த போது அங்கு வசிக்கும் மோகன் 114-வது வட்ட அ.தி.மு.க. இளைஞரணி செயலாளர் என்பதும் தெரியவந்ததாக காவல்துறையினர் கூறினர்.காவல்துறையினர் விசாரித்த போது மோகன் வீட்டில் இல்லை. எனவே மிரட்டல் கடிதத்தை மோகன்தான் எழுதினாரா? அல்லது அவரை சிக்க வைப்பதற்காக யாரேனும் இது போன்ற கடிதத்தை அவர் பெயரில் எழுதினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.