தி.மு.க சார்பில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராஜ கண்ணப்பன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததுடன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
1991 முதல் 1996 வரையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். பின்னர் 1996-ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு "மக்கள் தமிழ் தேசம்' என்ற கட்சியைத் தொடங்கினார்.
இதைத் தொடர்ந்து 2001-ல் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2006-ல் தி.மு.க.வில் இணைந்து இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஏற்கனவே பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்ததால் தி.மு.க. அரசின் அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் அவர் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் ராஜ கண்ணப்பன் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை சட்டப்பேரவை செயலாளரிடம் இன்று கொடுத்தார்.