தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியதாகவும், சிங்களக் கைக் கூலியாய்ச் செயல்படும் 'இந்து' நாளேட்டை கண்டித்தும் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள 'இந்து’ நாளேடு அலுவலகம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அப்பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது 'இந்து' நாளேட்டுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையை சேர்ந்த 70 பேர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறி அவர்களை காவல்துறை துணை ஆணையர் கணேச மூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவர்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில் காவல்துறையினர் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.