Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உண்ணாவிரதம் அறிவித்தது ஏன்?- கருணாநிதி விளக்கம்

உண்ணாவிரதம் அறிவித்தது ஏன்?- கருணாநிதி விளக்கம்
சென்னை , திங்கள், 23 பிப்ரவரி 2009 (15:44 IST)
வழ‌க்க‌‌றிஞ‌ர்களு‌க்கு‌ம், கா‌வ‌ல்துறை‌யினரு‌க்கு‌ம் மோதல் உருவாகாதா, அதிலே இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் உண்ணாவிரத அறிக்கையை விட நேர்ந்தது எ‌ன்று முதலமைச்சர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலையிலிருந்து, ஏன் நேற்று மாலை தொலைக்காட்சி செய்திகளுக்கு பிறகு மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசி தொடர்புகள்! என்னிடம் பேச வேண்டுமென்று வற்புறுத்தல்கள்! தவிர்க்க முடியாமல் சிலரிடம் படுக்கையிலே படுத்தபடியே பேசினால்- உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தது குறித்து ஏராளமான கேள்விக்கணைகள்- இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல் நிலையை மேலும் பாதிக்காதா? எதற்காக இப்படிப்பட்ட அறிவிப்பு காக்கிச் சட்டையினரும், கறுப்புச் சட்டையினரும் காது கொடுத்து உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்களா?

ஒரு சிலரின் தூண்டுதல் உண்டு என்ற போதிலும், அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமலா போய் விடுவார்கள்? வழக்கறிஞர்கள் போராட முன்வந்தது எதற்காக? இலங்கைத் தமிழர்களின் நலன்கள் கருதித் தானே! இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்காக நீங்கள் பாடுபட்டது இன்று நேற்றிலிருந்தா? அரை நூற்றாண்டுக்கு மேலாக அல்லவா நீங்கள் அதற்காக எழுதியும், பேசியும், செயல்பட்டும் வருகிறீர்கள்! என்றெல்லாம் கேள்விக்கு மேல் கேள்விகள்!

தமிழ்ப் போராளிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, கடற்கரை பெருவெளியில் அமர்ந்தவாறு பிரபாகரனுடனும், சிறீ சபாரத்தினத்துடனும், பத்ம நாபாவுடனும், முகுந்தனுடனும், பாலகுமாருடனும், ஆண்டன் பாலசிங்கத்துடனும், யோகியுடனும், பேபியுடனும், காசி ஆனந்தனுடனும் என்று மணிக்கணக்கிலே பேசிய நாட்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது. அது மட்டுமா? இன்று 2009ஆம் ஆண்டு. இதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பு 1989ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் தமிழீழத் தலைவர்கள் பலர், குறிப்பாக வழக்கறிஞர் சந்திரஹாசன், சச்சிதானந்தம், ஈழவேந்தன், சிவசுப்ரமணியம், சிவானந்தம், சிவநாயகன், பத்மநாபன், அருணாசலம், ஞானகணேசன், ஆனந்த ராஜா ஆகியோர் என்னை இல்லத்திலே சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து மூன்று மணி நேரம் உரையாடினர்.

அதற்குப்பின் நான்கு நாட்கள் கழித்து, 4.1.1990 அன்று இலங்கை அரசின் வெளி விவகாரத்துறை அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரத்னே, அவருடைய ஆலோசகர் பிராட்மேன் வீராகூன், மற்றும் ராணுவத்துறை செயலாளர் செபாலா அட்டிகலா ஆகியோர் என்னை இல்லத்தில் சந்தித்து, தமிழ்ப் போராளிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக நான் எடுத்து வரும் முயற்சிகளுக்காக தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து 7ஆ‌ம் தேதியன்று ஈராஸ் குழுவினைச் சேர்ந்த பாலகுமார், சங்கர், முகிலன் ஆகியோர் என்னைச் சந்தித்தனர். 8ஆ‌ம் தேதியன்று இலங்கையிலுள்ள இந்தியத் தூதர் மல்கோத்ரா என்னைச் சந்தித்தார்.

9ஆம் தேதியன்று இலங்கை வடகிழக்கு மாகாண முதலமைச்சர், ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தைச் சேர்ந்த வரதராஜ பெருமாள் என்னைச் சந்தித்தார். அதே ஆண்டு பிப்ரவரி 16, 17 ஆகிய நாட்களில் பாலசிங்கம், யோகி போன்றவர்கள் மீண்டும் சந்தித்தார்கள். அப்போது மத்திய அரசின் பிரதிநிதியாக தம்பி முரசொலிமாறன் மத்திய அமைச்சர் என்ற முறையில் உடன் இருந்தார். ஒருசில நாட்களில் இந்த அளவிற்கு போராளிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை மாற்றி மாற்றி தொடர்ந்து நான் சந்தித்தது தற்போது போராட்டம் நடத்த
முன் வந்திருப்பவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

தி.மு.க நடத்திய போராட்டங்கள் எத்தனையெத்தனை

அந்தச் சந்திப்புகள் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட போது, போராளிகளுக்கிடையே மோதல் ஏற்படாமல் இருப்பதற்காகப் பேசிக் கொண்டிருக்கிறேன், சுமூகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறேன் என்று கூறினேன். அந்தப் பேச்சுவார்த்தையின் போது விடுதலைப்புலிகள் ஜனநாயகப் பாதைக்கு வருவதற்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டார்கள். ஈழத்தில் ஜனநாயக அடிப்படையில் அமைதியும் பாதுகாப்பும் தொடர்ந்து நிலவ வேண்டும் என்பதே என் நோக்கமும், அன்றைய பிரதமர் வி.பி.சிங்கின் நோக்கமும் ஆகும் என்று அவர்களிடம் தெரிவித்தேன்.

நான் அப்போது தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் மட்டும் பலித்திருக்குமேயானால், வெற்றி பெற்றிருக்குமேயானால் இந்த இருபதாண்டு காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் செத்து மடிந்திட நேர்ந்திருக்காது. 1990ஆம் ஆண்டைப் பற்றிச் சொன்னேன். அதற்கு முன்பே 1981ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு. கழகம் நடத்திய போராட்டங்கள் எத்தனையெத்தனை. அதன் காரணமாக அப்போதிருந்த அ.தி.மு.க. ஆட்சியினரால் நான் கைது செய்யப்பட்டு சிறையிலே அடைக்கப்பட்டதும் - அதனைக் கண்டித்து கோயிலடி பிருந்தாவன், திருச்சி மனோகரன், பெருந்துறை முத்துப் பாண்டியன், திருவாரூர் கிட்டு, சென்னை மேரி, கல்லாவி ராஜேந்திரன், மேல்மாயில் ஜெகன்னாதன் ஆகிய ஏழு பேர் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை தங்களுக்குத் தாங்களே போக்கிக் கொண்டார்கள் என்பது நாடறிந்த செய்தியாகும்.

அதன் பிறகு, யாழ்ப் பாணத்தில் தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட்ட சிவனேசன் என்ற போலீஸ்காரரை சுட்டுக் கொன்றதாகக் கூறி - தமிழ் இளைஞர்கள் குட்டிமணி, ஜெகன் ஆகியோர் மீது வழக்கு நடைபெற்று, 13.8.1982 அன்று இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நீதி மன்றத்தில் அப்போது குட்டிமணி, தன்னைத் தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குட்டிமணிகள் உதயமாவார்கள் என்றும், தன் இனத்திற்காக தரக் கூடியதாக இருப்பது தன் உயிர் மாத்திரம் தான் என்றும், தன் கண்களை பார்வையற்ற ஒரு தமிழ் மகனுக்கு வழங்கும் படியும், அந்தக் கண்களின் மூலம் மலரப்போகும் தமிழ் ஈழத்தைப் பார்க்கப் போவதாகவும், தன் உடலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு வழங்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதோடு - தனக்காக வாதாடிய வழக்கறிஞர்களிடம் தன் உயிரைக் காப்பாற்றுவதற்காக யாரிடமும் மண்டியிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தச் செய்தி வந்ததும், "தமிழ் இனம் மெல்ல மெல்ல அழிவதா?'' என்ற தலைப்பிலே முரசொலியிலே கடிதம் எழுதியவன் தான் இன்று உண்ணாவிரதம் இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளேன். முரசொலியில் அப்போது எழுதிய கடிதத்தில் "வாழ்வின் எல்லைக் கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள நேரத்திலும் அந்த வாலிபர்களின் வைரம் பாய்ந்த உள்ளத்தினை எண்ணியெண்ணி வையகமே திகைத்துத்தான் நிற்கிறது. தீரர் இருவர்க்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு கேட்டுத் தீயை மிதிப்பது போல ஆகிவிட்ட தமிழா! நீ உலகத்தின் எந்த மூலையிலே இருந்தாலும் அந்த இடத்தில் நீ தன்னந்தனியனாக ஒருவனாக இருந்தாலும், அந்த இளந்தம்பிகளின் உயிரைக் காக்க, எஃகுக் கம்பிகளின் மரண தண்டனையைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுத்தே ஆக வேண்டும். உடன் பிறப்பே, உனக்கும் எனக்கும் ஏற்படுகிற இந்த உணர்வு எங்கெங்குமிருக்கின்ற எல்லாத் தமிழர்க்கும் ஏற்பட்டே தீரும்! ஏற்பட்டே ஆக வேண்டும்! இல்லையேல் தமிழ் இனம், மெல்ல மெல்ல - ஆனால் உறுதியாக அழிக்கப்பட்டே விடும்'' என்று இப்படித் தான் முடித்திருந்தேன்.

இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவிற்கு தந்திகள்

அதே திங்கள் 28.8.1982 அன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நாள் என்ற பெயரில் அனைவரும் தங்கள் உடையில் கறுப்புச் சின்னங்கள் அணிய வேண்டுமென்றும், மாலையில் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டேன். சென்னையிலே நடைபெற்ற கூட்டத்தில் நான் கலந்து கொண்டு உரையாற்றினேன். மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களை விடுதலை செய்யும்படி கேட்டு இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவிற்கு தந்திகள் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டேன். அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு 25.7.1983 அன்று பிற்பகல் 2.30 மணி அளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இருந்த குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற தமிழ் இளைஞர்களை சிங்களக் காடையர் உள்ளே புகுந்து கொன்று குவித்தனர்.

பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மறுநாளே சென்னையில் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெறும் என்று அறிவித்து, ஏழு மணி நேர அவகாசத்தில் எட்டு இலட்சம் பேர் சென்னையிலே திரண்டனர். கடைகளை மூட வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை, ஆனால் அன்று எந்தக் கடைகளும் திறக்கப்படவில்லை. ஆட்டோக்கள் ஓடாது என்று யாரும் கூறவில்லை, ஆனால் அன்று ஆட்டோக்கள் சென்னையிலே ஓடவில்லை. இதனைத் தொடர்ந்து எத்தனையெத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

இதெல்லாம் தமிழகத்தின் வரலாற்றுப் புத்தகத்தில் அத்தியாயங்களாக பதிவாகியுள்ளன. ஆனால் தற்போது சிலர் இலங்கைத் தமிழர் பிரச்சனை என்பது அவர்களுக்கு மட்டுமே உரியதைப் போலவும்- நானும், நமது கழகமும் அதிலே அக்கறையற்றதைப் போலவும் மக்களிடம் செய்தி பரப்பிட முனைகின்றார்கள். என் கையால் எழுதப்பட்ட செயற்குழு, பொதுக்குழு தீர்மானங்களிலேயே எந்தப் பிரச்சனைக்காக அதிகமான தீர்மானங்களை எழுதியிருப்பேன் என்று என் விரல்களைக் கேட்டால், அது கூறும் - இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காகத்தான் என்று.

ஆனால் சிலர் தற்போது நம்முடைய தீர்மானங்களில் தீவிரம் இல்லை என்கிறார்கள், பதவியைத்துறக்க விருப்பமில்லை என்கிறார்கள், ஆட்சியிலே இருப்பதால் அதனைக் காப்பாற்ற முயலுகிறேன் என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆமாம், இலங்கையிலே இருக்கிற தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு இருக்கிற அக்கறையைப் போல, இங்கேயிருக்கின்ற தமிழர்களையும் காப்பாற்ற வேண்டிய அக்கறையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது அல்லவா?

ஆனாலும், கடந்த மாதம் சட்ட மன்றத்திலே இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, இலங்கையிலே தமிழ் ஈழம் மலருமென்றால் அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார் என்று அறிவித்தவன் தான் நான். ஆனால் அதையெல்லாம் வசதியாக மறைத்து விட சிலர் முயலுகிறார்கள். தாங்கள் தான் இலங்கைத் தமிழர்களுக்கான பாதுகாவலர்கள் என்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் தான் ஒரு சிலரைத்தூண்டி விட்டு தமிழகத்திலே ஒரு கலவரத்தைத் தூண்டி விட முடியாதா? அதைக் கொண்டு சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று ஆட்சியைக் கவிழ்த்து விட முடியாதா? சட்டமன்றம் கூடப் போகிறது என்றவுடன் எந்தப் பிரச்சனையை கிளப்பலாம் என்று தேடிப் பார்த்து - தேவையில்லாமல் ஏதோ ஒரு வழக்கிற்காக நீதிமன்றம் செல்கிறேன் என்று கூறிக் கொண்டு, அங்கே சென்று, அந்த இடத்திலே ஒரு தகராறு வரக்கூடிய அளவிற்கு நடந்து கொண்டு, அதன் காரணமாக அங்கே ஒரு விரும்பத்தகாத சம்பவத்தை உருவாக்கினார்கள். நீதிமன்றத்திலே தகராறு - சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று ஏடுகளில் கற்பனையாக செய்தி வரக் கூடிய அளவிற்கு நிலைமைகள் ஏற்பட்டன. அந்தச் செய்தி கிடைத்தவுடன் நானே காவல்துறை அதிகாரிகளை விட்டு நடந்த சம்பவத்திற்காக வருத்தம் தெரிவிக்கச் செய்தேன்.

மோத‌ல் உருவாகாதா, ரத்தம் வடியாதா? அதிலே இன்பம் காண முடியாதா

இதற்குப் பிறகும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கசப்புணர்வு ஏற்படுகின்ற அளவிற்கு நிலைமை போய் விட்டது. வழக்கறிஞர் வீட்டிலே உள்ளவர்கள் பலர் காவல்துறையிலே பணியாற்றுகிறார்கள். காவல் துறையினர் வீட்டிலே உள்ளவர்கள் பலர் வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். ஆனால் இருவருக்குமிடையே பகை உணர்ச்சி. இரு தரப்பினரும் யார்? இரு தரப்பினருமே தமிழர்கள் தான். என்னுடைய உடன் பிறப்புகள் தான்.

இவர்கள் இடையே மோதுதல் உருவாகாதா, ரத்தம் வடியாதா? அதிலே இன்பம் காண முடியாதா என்று ஏங்குபவர்களுக்கு இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் நான் நேற்றையதினம் உண்ணாவிரத அறிக்கையை விட நேர்ந்தது. என் உயிரைப் பற்றிக் கவலைப்பட்டு, உடல் நலம் இல்லாத நிலையில் இப்படி அறிக்கை விடலாமா என்று அன்போடு கோபிக்கிறார்கள். இருப்பது ஓர் உயிர் தான், அது போகப் போவது ஒரு முறை தான், அது ஒரு நல்ல காரியத்திற்காகக் போகட்டும் என்று சொன்ன பேரறிஞர் அண்ணா அவர்களின் உண்மையான தம்பி நான் என்ற உணர்வோடு விடப்பட்டது தான் அந்த அறிக்கை.

வீட்டிலே அண்ணன் தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் முரண்டு பிடித்துக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில் அவர்களை ஒற்றுமைபடுத்த உண்மையான ஒரு தாயார் வேறு என்னதான் செய்ய முடியும் நீங்கள் ஒழுங்காக இல்லாவிட்டால் எனக்கு இதைத் தவிர வேறுவழியில்லை என்று உரைப்பதில்லையா? அதைத்தான் நானும் அறிக்கையாக்கியிருக்கிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil