வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் அனைவரும் சுயஉதவிக் குழு இயக்கத்தில் சேர்ந்து பயனடைய ஒரு இலட்சம் புதிய சுயஉதவிக் குழுக்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
2009-10ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது :
1989 ஆம் ஆண்டு இந்த அரசால் தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு இயக்கம், இன்று ஆல் போல் தழைத்து மாநிலமெங்கும் 62 இலட்சம் உறுப்பினர்கள் உள்ள 3,91,000 சுயஉதவிக் குழுக்களைக் கொண்ட மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.
இவற்றில் 2,74,000 குழுக்கள் கிராமப்புர பகுதிகளிலும், 1,17,000 குழுக்கள் நகர்ப்புரப் பகுதிகளிலும் இயங்கி வருகின்றன. இக்குழுக்களை ஊக்கப்படுத்தும் வகையில், முதல் முறையாக நகர்ப்புரங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதோடு, ரூபாய் 150 கோடி செலவில் தகுதியுடைய அனைத்து சுயஉதவிக் குழுக்களுக்கும் சுழல்நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல பெண்கள் இன்னும் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பயனடைய இயலாதிருப்பது அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் அனைவரும் சுயஉதவிக் குழு இயக்கத்தில் சேர்ந்து பயனடைய வேண்டுமெனில், சுமார் ஒரு இலட்சம் புதிய சுயஉதவிக் குழுக்கள் நமது மாநிலத்தில் அமைக்கப்பட வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனை வரும் இரண்டு ஆண்டுகளில் எய்தும் வகையில், 2009-2010 ஆம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய சுயஉதவிக் குழுக்களும், 2010-2011 ஆம் ஆண்டில் மேலும் 50 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களும் அமைக்கப்படும்.
இப்பணி நிறைவடைந்த பின், நமது நாட்டிலேயே வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் அனைத்து மகளிரையும் சுயஉதவிக் குழு இயக்கத்தில் உறுப்பினர்களாக இடம்பெறச் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும்.
ஊராட்சி அளவிலான இணையங்களில் உறுப்பினர்களாக உள்ள சுயஉதவிக் குழுக்கள், எளிதில் வங்கிக் கடன் பெற்று நல்ல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும் என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. இதற்காக, இத்தகைய இணையங்களை அமைத்து அவற்றிற்குத் தேவையான உதவிகளையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் இந்த அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்து வருகிறது.
இந்த இணையங்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், நமது மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படும் 1,000 ஊராட்சி அளவிலான இணையங்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ஒரு இலட்சம் அளிக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூபாய் 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.