சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததை எதிர்த்து அக்கோயிலின் தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த சுப்ரமணிய சாமி மீது முட்டை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக மனுத்தாக்கல் செய்ய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி இன்று சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்தார்.
அப்போது, இலங்கை பிரச்சனையால் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்கள் சுப்ரமணிய சாமி மீது அழுகிய முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துகளை தொடர்ந்து சுப்ரமணிய சாமி கூறி வந்ததே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து சுப்ரமணிய சாமி மீது அழுகிய முட்டை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தாக்குதல் பற்றி சுப்ரமணிய சாமி கூறுகையில், எனக்கு நீதிமன்றத்துக்குள்ளேயே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இங்கு காவல்துறைக்கே பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இது பற்றி மத்திய அரசிடம் முறையிடுவேன் என்றார்.