இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்காக கடந்த சில வாரங்களாக தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் இன்றுடன் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். நாளை முதல் நீதிமன்றப் பணிக்கு செல்ல வழக்கறிஞர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் பாதுகாப்பு வழக்கறிஞர்கள் குழு கடந்த ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஒரு சில வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
இந்த நிலையில், வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் பொதுக்குழு கூட்டம் இன்று காலை கூடியது. இதில் பெரும்பாலான வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டு நீதிமன்றப் பணிக்கு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தொடர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். முடிவில் இன்று வரை நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என்றும், நாளை முதல் இப்போராட்டத்தை விலக்கிக் கொண்டு பணிக்குச் செல்லவும் முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து சங்கத் தலைவர் பால்கனகராஜ் கூறுகையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை தடுத்து நிறுத்த வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டம் கைவிடப்படவில்லை என்றும், நீதிமன்ற புறக்கணிப்பு மட்டும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என்றும், ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம், தர்ணா, பேரணி என்ற வடிவில் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
சங்கத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் கையெழுத்து வேட்டை நடத்தினர். சங்கத்தின் பொதுக்குழுவை நாளை மீண்டும் கூட்டி போராட்டம் விலக்கிக் கொள்வது குறித்து வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
எனவே இப்பிரச்சனைக் குறித்து வழக்கறிஞர்கள் சங்கம் நாளை மீண்டும் கூடி முடிவெடுக்கும் என்று தெரிகிறது. இன்றைய போராட்டத்தினாலும் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
இதற்கிடையில் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமான லா அசோசியேஷன் சார்பில் இலங்கையில் நடைபெறும் போரை தடுத்து நிறுத்தக் கோரி சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.