இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவுங்கள் என்று தே.மு.தி.க. தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை தே.மு.தி.க.வின் கொடி நாளாகும். அன்றைய தினம் கொடிகளை புதுப்பிப்பதும், புதிய இடங்களில் கொடியேற்றுவதும் நாம் வழக்கமாக கொண்டுள்ள நடைமுறையாகும்.
அதற்கு ஒப்ப இம்மாதம் 12ஆம் தேதி தமிழ்நாடெங்கும் நமது கொடிகளே இல்லாத இடமில்லை என்று மாற்றாரும் வியக்கத்தக்க வகையில் பட்டிதொட்டியெங்கும் கழக கொடியை ஏற்றி பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் இனிப்பு வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் இல்லாத அளவு இன்று இலங்கையில் தமிழர்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அங்கிருந்து பலர் தமிழ்நாட்டுக்கு அகதிகளாகவும் வந்த வண்ணம் உள்ளனர். இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற நம் கொள்கையின்படி, இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களுக்கு சென்று இலவச அரிசி போன்ற அவர்களுக்கு தேவைப்படும் அத்தியாவசியமான பொருட்களை தங்களால் இயன்றளவுக்கு செயல்வீரர்கள் வழங்கி இந்த நாளை சிறப்பிக்க வேண்டும் என்று விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.