இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பா.ம.க. நிறுவனர் ராமதாசின் பேச்சு தமிழ் மக்களை ஏமாற்றும் மோசடி வித்தையாக அமைந்துள்ளது என்று மத்திய அமைச்சரும் தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசா குற்றம்சாற்றியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் 7ஆம் தேதி நடத்தப்பட்ட ஊர்வலத்தின் முடிவில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன், திருமாவளவன் ஆகியோர் உரையாற்றியதில் இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறோம் என்கிற போர்வையில் தி.மு.க.வையும், முதலமைச்சர் கருணாநிதியையும் குறைசொல்லி தாக்கியிருக்கிறார்கள்.
இத்தலைவர்களின் உரைகளில் இருந்து- குறிப்பாக டாக்டர் ராமதாஸ் போன்றவர்களின் உரையில் மறைந்திருக்கும் சூட்சுமம் அடங்கிய அரசியல் வெளிப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு என்பதைக் காட்டிலும், "திருட்டுத்தனமாக'' தங்களின் "இருப்பை'' நிலைநிறுத்தும் முயற்சியாகவும்- தி.மு.க. கட்டிக் காத்துவரும் கொள்கை அடையாளங்களை "அரசியல் அரிதாரமாக'' பூசிக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற மோசடி வித்தையாகவும் அமைந்துள்ளது என்பதே உண்மையாகும்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது என்று அதே மேடையில் தா.பாண்டியன், கருணாநிதியை சாடுவதாக நினைத்துக் கொண்டு பேசிய பேச்சு எழுபதாண்டு கால அரசியல் - போராட்ட வாழ்க்கைக்கு சொந்தக்காரரான கருணாநிதிக்கோ-
இருபத்தைந்து ஆண்டுகள் அரசியல் தழும்புகளை பொதுவாழ்வில் தாங்கியுள்ள மு.க.ஸ்டாலினுக்கோ பொருந்துவதல்ல; தனக்கும், தன் மனைவி, மகன் மருமகள் உள்ளிட்ட உறவினர்களுக்குமே என்று ஜாடையாய் சொன்ன வாசகங்களை தெளிவாக புரிந்து கொள்ள முடியாத ராமதாஸ் தெளிவு பற்றி கருணாநிதிக்கு சொல்லித் தருவது வேடிக்கையாகும்.
எதையாவது பேசி- நடத்தி, தமிழ், தமிழுணர்வு என்ற கலாசாரக் கட்டுமானத்தை எப்படியாவது கைப்பற்றி அரசியல் நடத்திட வேண்டும் என்பதற்காக குழந்தைத்தனமாக பேசும் ராமதாஸ், பறித்த ஆயுதங்களை விடுதலைப்புலிகளுக்கு எம்.ஜி.ஆர். வழங்கவில்லையா? என்று கேட்கிறார். சபாஷ்; இதையே சாரமாக வைத்து ஒரே ஒரு கடிதத்தை அவரல்ல, அவருடைய மகன் அன்புமணியின் வாயிலாக மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டு, பால்ரஸ் குண்டுகளை பற்றி பேசினால் இவரின் வெடிகுண்டு வீரத்தை நானே வணங்கி பாராட்டுவேன்; தயாரா?.
பிரபாகரனின் பேட்டியில் `சர்வாதிகார ஆட்சி' என்று குறிப்பிடவில்லை என்கிறார் ராமதாஸ். ராமதாஸ் குறிப்பிடுகின்ற ஒற்றைக்கட்சி ஆட்சி முறையாவது அவருக்கு சம்மதமா? அதையே ஜனநாயகத்தின் பண்பாக பிரகடனப்படுத்தி அரசியல் செய்ய தயாரா? ஒற்றைக்கட்சி ஆட்சிக்கும், சர்வாதிகார ஆட்சிக்கும் என்ன அரசியல் பண்பியல் வேறுபாடு என்பதை தத்துவார்த்த ரீதியாக தைலாபுர தோட்டம் விளக்கிடுமா?
குழப்பத்திற்கும், தெளிவின்மைக்கும் ஒரு கூட்டணி அமைத்து அதற்கு தலைமை தாங்கும் ராமதாசும், அவரது கூட்டாளிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அணுகுவது கருணாநிதி தீர்க்கதரிசனமாய் குறிப்பிட்டதுபோல் `திண்ணையை பிடிக்கிற முயற்சியே தவிர; திண்ணிய முயற்சியல்ல என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொண்டு, இலங்கை தமிழர் நல உரிமைப் பேரவை எடுக்கும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கு தோள் கொடுப்பதன் மூலம் இந்த குதர்க்கவாதக் கூட்டாளிகளுக்கு பாடம் புகட்டும் காலம் தூரத்தில் இல்லை என்று ஆ.ராசா கூறியுள்ளார்.