வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்ய ஞான சபையில் 138-வது தைப்பூச ஜோதி தரிசன விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 5 மணிக்கு அகவல் பாராயணம் நடக்கிறது.
வள்ளலார் பிறந்த மருதூர் இல்லத்திலும், கருங்குழி இல்லத்திலும் 7.30 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. பார்வதிபுரம் கிராம மக்கள் முன்னிலையில் காலை 10 மணிக்கு ஞானசபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. காலை முதல் ஜோதி தரிசனம் நடக்கிறது. 11 மணிக்கு மலிவு விலையில் திருவருட்பாவின் 6-ம் திருமுறை நூல் வெளியிடப்படுகிறது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்குகிறார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் முதன்மை செயலர் பிச்சாண்டி, தமிழ் வளர்ச்சி அறநிலையத்துறை அரசு செயலர் முத்துசாமி, இணை ஆணையர் திருமகள் முன்னிலை வகிக்கின்றனர்.
வணிக வளாகம், சித்தி வளாகத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டுகிறார். திருவருட்பா நூலை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிடுகிறார். என்.எல்.சி தலைவர் அன்சாரி, நாடாளுமன்ற உறுப்பினர் பொன்னுசாமி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் குமார் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.