Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணா‌நி‌தி அச்சப்பட தேவை இல்லை : ராமதாஸ்

Advertiesment
கருணா‌நி‌தி அச்சப்பட தேவை இல்லை : ராமதாஸ்
சென்னை , சனி, 7 பிப்ரவரி 2009 (10:42 IST)
இலங்கை‌த் த‌‌மிழ‌ர்களு‌க்காக எல்லோரும் இணைந்து போராடும்போது ஆட்சிக்கு ஆபத்து என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அச்சப்பட தேவையே இல்லை என்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதாஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தி.மு.க. செயற்குழுவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முடிவுகள் பற்றி நான் எழுப்பிய சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி விடையளித்திருக்கிறார். ஆனால், என்னுடைய பெயரைக் குறிப்பிடுவதற்கு அவருக்கு மனம் வரவில்லை. என் மீது அவருக்கு அவ்வளவு ஆத்திரம்.

இலங்கையில் அழிந்து கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளுக்கு தலைமையேற்று செயல்படுங்கள். உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்று நான் சொல்வது அவருக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதலை உருவாக்கி அதில் என்னுடைய செல்வாக்கை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்று முதலமைச்சர் வீண் பழிசுமத்துகிறார்.

இப்போது, தமிழக மக்களும் இதைத் தான் விரும்புகிறார்கள்; இப்படித்தான் எண்ணுகிறார்கள் என்று லயோலா கல்லூரி கருத்து கணிப்பு முடிவு அறிவிக்கப்பட்டிருக்கிறதே, இதற்கு முதலமைச்சர் என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்? யார் மீது பழி சுமத்தப் போகிறார்?

1958ஆம் ஆண்டில் தி.மு.க. அறிவித்த முடிவுக்கும் இப்போது, தி.மு.க. செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ள முடிவுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சுட்டிக்காட்டினால், 50 ஆண்டு காலத்திற்குப் பிறகும் தி.மு.க. அதே முடிவில் தான் இருக்கிறது என்பதில் என்ன தவறு உள்ளது என்று முதலமைச்சர் திருப்பிக் கேட்கிறார்.

தி.மு.க.வைப் பொறுத்தவரையில், 50 ஆண்டு காலமாக ஒரே முடிவில் இருக்கலாம். அன்றும் இன்றும் ஒரே முடிவிலேயே நிற்கலாம். ஆனால், இந்த 50 ஆண்டு காலத்தில், தி.மு.க. மேற்கொண்டுள்ள ஒரே முடிவினால், அல்லது ஒரே நிலைப்பாட்டினால் என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? உங்களது முடிவு இலங்கைத் தமிழர்களை எந்த வகையில் காப்பாற்றியிருக்கிறது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

இலங்கைத் தமிழர்களுக்காக உழைப்பவர்கள் யார்? தியாகம் செய்பவர்கள் யார்? ஆதாயம் தேடிக் கொள்ள முயல்பவர்கள் யார்? என்பதெல்லாம் உலகத் தமிழர்களுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியிருக்கும் முதலமைச்சர், இலங்கைத் தமிழர்களுக்காக தி.மு.கழகம் எப்படியெல்லாம் போராடி வந்திருக்கிறது, எப்படியெல்லாம் தியாகம் செய்திருக்கிறது என்ற பட்டியலை கொடுத்திருக்கிறார். 1977-ம் ஆண்டிலிருந்து இந்தப் பட்டியல் தொடங்குகிறது.

1995‌ல் முழு அடைப்புடன் முடிகிறது தி.மு.க. போரா‌ட்ட‌‌ம்

1987ஆம் ஆண்டு வரையிலான பட்டியலை உற்று நோக்கினால், தடையை மீறி ஊர்வலம், ரயில் மறியல், வேலை நிறுத்தப்போராட்டம், முழு அடைப்பு, தொடர் மறியல், மனிதச் சங்கிலி, கண்டனப் பேரணிகள் என அது நீண்டு கொண்டு போகிறது. 1977 முதல் 1987 வரையிலான பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் இருந்தது எம்.ஜி.ஆரின் ஆட்சி; அந்த காலக் கட்டத்தில் தி.மு.க. எதிர்க்கட்சி. இன்றைக்கு எந்தப் போராட்டம் சட்ட விரோதம் என்றும், ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் சதி என்றும் திண்ணையை விட்டு அண்ணனை காலி செய்யப் போடுகிற திட்டம் என்றும் எதைச் சொல்கிறாரோ, அந்தப் போராட்டத்தையும், அதைவிட அதிகமாகவும், வேகமாகவும் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நடத்தியிருக்கிறது.

அப்படியென்றால், அன்று தி.மு.க. நடத்திய போராட்டங்களெல்லாம், இலங்கைத் தமிழர்களின் நலனை காக்க நடத்திய போராட்டங்களா? அல்லது தி.மு.க. நலனைக் காக்கவும், அன்று பதவியில் இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியைக் கவிழ்க்கவும், கலைக்கவும் நடத்தியப் போராட்டங்களா? என்று உலகத் தமிழர்கள் எண்ணிப்பார்க்க மாட்டார்களா?

1989 முதல் 1991 வரையில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அந்த இரண்டாண்டு காலத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தி.மு.க. எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை. இன்னும் சொல்லப்போனால், இலங்கைத் தமிழர் நலன் காக்க ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட நடத்தவில்லை. சில சந்திப்புகள் மட்டுமே நடைபெற்றிருக்கிறது. தி.மு.க.வின் போராட்டப் பட்டியல், அதாவது தியாகப் பட்டியல் 1991-க்கு பிறகு மீண்டும் தொடங்குகிறது. 1995-ம் ஆண்டில் தி.மு.க. நடத்திய முழு அடைப்புடன் அது முடிகிறது.

அரசியல் விளைவுகள் எப்படியிருக்கு‌ம்

அந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகத்தில் பதவியில் இருந்தது அ.தி.மு.க. ஆட்சி. அப்போதும் தி.மு.க. எதிர்க்கட்சி. இதிலிருந்து என்ன புரிகிறது? தி.மு.க. எப்போதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறதோ அப்போதெல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறது. ஆட்சிக் கட்சியாக மாறிய போதெல்லாம் இலங்கைத் தமிழர் பிரச்சனையையும், இலங்கைத் தமிழர் நலனையும் கைவிட்டிருக்கிறது.

எல்லோரும் இணைந்து போராடும் போது, ஆட்சிக்கு ஆபத்து என்று அச்சப்படத் தேவையே இல்லை. ஆனாலும் ஆட்சி பற்றிய பயத்தை விடுத்து முதலமைச்சர் துணிச்சலாகச் செயல்பட வேண்டும் என்றும் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஆட்சியை இழக்க நேரிட்டாலும், அடுத்து வரும் தேர்தலில் தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பெரும்பாலான மக்கள் கருதுவதாக லயோலா கல்லூரி கள ஆய்வு தெரிவிக்கிறது.

தமிழக மக்களின் நாடித் துடிப்பு இதுதான். இதை மனதில் வைத்து முதலமைச்சர் கருணாநிதி செயல்படவேண்டும். இதற்கு மாறாகச் செயல்பட்டால், அதனால் ஏற்படும் அரசியல் விளைவுகள் எப்படியிருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அரசியல் அறிஞரான கலைஞருக்கே அது நன்றாக புரியும் எ‌ன்று ராமதா‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil