ராமேஸ்வரம் அருகே உள்ள நரிக்குளி கடற்கரைப் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த அதிவிரைவு பைபர் கிளாஸ் படகு ஒன்றை காவல்துறையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.
அந்த படகு கரையோரத்தில் யாருமில்லாமல் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், நல்ல நிலையில் இருந்த அந்தப் படகில் எந்தப் பொருளும் இல்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொதுவாக விடுதலைப்புலிகளின் கடற்பிரினரே இதுபோன்ற பைபர் கிளாஸ் கொண்ட படகுகளை தங்களின் தாக்குதலுக்காக பயன்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அப்பகுதிக்கு விடுதலைப்புலிகள் வந்தார்களா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் கூறினர்.
ஏற்கனவே கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ராமேஸ்வரம் சேரன்கோட்டை என்ற கடற்கரைப் பகுதியில் 4 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், எரிபொருள் சேமிக்கும் கேன், அடையாள அட்டைகள் உள்ளிட்டவற்றுடன் ஒரு பைபர் கிளாஸ் படகினை காவல்துறையினர் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.