Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை‌த் தமிழர்களை காக்க ஒ‌ன்றாக இரு‌ப்போ‌ம் வா‌ரீ‌ர்: கருணாநிதி அழை‌ப்பு

Advertiesment
இலங்கை‌த் தமிழர்களை காக்க ஒ‌ன்றாக இரு‌ப்போ‌ம் வா‌ரீ‌ர்: கருணாநிதி அழை‌ப்பு
சென்னை , வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:23 IST)
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாப்பதில், ஒன்றாக இருப்போம் வாரீர் எ‌ன்று அனை‌த்து‌க் க‌ட்‌சி‌யினரு‌க்கு‌ம் அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ள முதலமைச்சர் கருணாநிதி, எல்லோரும் ஒன்றுபட்டால் இலங்கைத் தமிழினம் காக்கப்படும் என்பது உறுதி எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், `உடன்பிறப்பே' என்று அழைத்து இந்த வேண்டுகோள் கடிதம் நான் எழுதும் போது, தி.மு.க. உடன் பிறப்புகளை மட்டும் தான் குறிப்பிடுகிறேன் என்று கருதாமல், தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளின் செயல் வீரர்களையும், தூய தொண்டர்களையும் விளித்து எழுதுவதாகவே கருதி, நான் உறவு கொண்டாடி உரைக்கின்ற விளக்கங்களையும், விடுக்கும் வேண்டுகோளையும் சிந்தித்து ஏற்பீர் என்ற நம்பிக்கையில் எனக்காக- உனக்காக என்றில்லாமல் தமிழ் இனத்துக்காக கடமையாற்றிடக் கனிவுடன் அழைக்கிறேன்.

அரசியல் இயக்கங்களுக்கிடையே தொடரும் சகோதர யுத்த‌ம்

தமிழ் இனம், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஒன்றுபட வேண்டும் என்று கூறுவது, வெறும் உபதேசமல்ல, 'ஊருக்கல்லவா சொன்னேன், உனக்கும் எனக்கு மல்லவே', என்று நினைத்திடும்- அல்லது அவ்வாறு நடந்திடும் உபதேசிகளையும் கொண்ட உலகம் தான் இது. அத்தகைய ஒவ்வா நிலையிலிருந்து ஒதுங்கி வந்து என் உயிரினு மேலான உடன்பிறப்பே, உனக்கு இதை உரைக்கின்றேன்.

50 ஆண்டுகளுக்கு மேலாக - அறநெறியில் நடத்தப்பட்ட போராட்டங்களிலும், ஆயுதம் தாங்கி அடலேறுகள் நடத்திய போராட்டங்களிலும், இலங்கைத் தமிழர் பிரச்சனை தீர்வு காணாமல் நீடிப்பதற்கு மிக முக்கியமான காரணம், இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கிடையே நடைபெற்ற சகோதரப் போராட்டங்களும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தர இங்கே தமிழகத்தில் இயங்கிடும், அரசியல் இயக்கங்களுக்கிடையே தொடரும் சகோதர யுத்தங்களும் தான் என்பதை மறக்கவும் கூடாது, மறைப்பதும் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவுக்கு வழி வகுக்காது.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அங்குள்ள தமிழர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களைப் போரின் விளைவுகளில் இருந்து பாதுகாப்பதற்காகவும், ஒரே விதமான உணர்வும் கொள்கையும் கொண்டவர்கள் இங்கே, தமிழ்நாட்டில் ஒற்றுமையாகச் செயல்பட முடிந்திருக்கிறதா என்பதைத் கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து, இனியாவது நல்ல முடிவு எடுத்து ஒற்றுமைச் சூழ்நிலையை உருவாக்கிட உதவிட வேண்டும் என்று எல்லா இயக்கங்களையும் சேர்ந்த உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆளுங்கட்சி என்ற முறையில் தி.மு.க. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும், தமிழக அரசின் தலைமை செயலகத்தில் கூட்டி அந்த கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, நாடாளுமன்ற, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளைத் துறந்திட தி.மு.க. தவிர வேறு கட்சிகள் முன்வராத நிலையில் அந்த தீர்மானம் கிடப்பிலே போடப்பட்டது.

அடுத்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடப்பட்டு நடைபெற்ற "மனிதச் சங்கிலி'' நிகழ்ச்சியை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதன் தோழமைக் கட்சியான ம.தி.மு.க.வும் வேறு சில கட்சிகளும் புறக்கணித்தே விட்டன.

இனியும் பிளவு மனப்பான்மை அதிகமாகி விடக் கூடாதே

டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்து முறையிட என் தலைமையில் அனைத்து‌க்கட்சி தலைவர்களும் சென்ற போது பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவை அந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆளுங்கட்சி சார்பில் நானே முன் மொழிந்து இலங்கையில் போர் நிறுத்தம் செய்திட சட்டமன்றத்தில் 3 முறை விடுப்பித்த வேண்டுகோள் தீர்மானம் கூட பிரதான எதிர்க்கட்சியின் வெளிநடப்பு என்ற செய்தியோடு தான் முடிவுற்றது.

பிரதான எதிர்க்கட்சியின் தோழமை கட்சிகள் இலங்கை பிரச்சனைக்காக நடத்திய அறப்போர்களிலும், பிரதான எதிர்க்கட்சி கலந்து கொள்ளவில்லை. அதே சமயம் ஆளும் கட்சியான தி.மு.க.வும் இந்த கட்சிகளால் முறையாக அழைக்கப்படவே இல்லை.

எனினும் ஆளுங்கட்சி என்ற பொறுப்பும் கடமையும் இருப்பதை எண்ணி எதிர்க்கட்சி முதற்கொண்டு எல்லா கட்சிகளின் ஆதரவையும் திரட்ட முயற்சி மேற்கொண்டு அதிலும் வெற்றி பெற முடியாத நிலைமையே ஏற்பட்டது.

சில கட்சிகளின் தலைவர்கள், இந்தப் பிரச்சனையில் தி.மு.க. தான் முன் நிற்க வேண்டுமென்று முழங்கினார்களே தவிர, நாம் என்னவோ, போர் நிறுத்தம் என்பதற்கு எதிரிகள் போலவும், இலங்கைத் தமிழர் பற்றி அக்கறையற்றவர்கள் போலவும் அறிக்கைகள் - பேட்டிகள் அளிக்க முற்பட்டு, ஒற்றுமை முகிழ்ப்பதைக் குலைத்திடக் காரணமானார்கள். குறிப்பிட்டு அவர்கள் யார் என்று சுட்டிக் காட்ட நான் விரும்பவில்லை. இனியும் பிளவு மனப்பான்மை அதிகமாகி விடக் கூடாதே என்பதற்காக.

இதோ, அயல்நாடுகள் பலவும் அக்கறையுடன் இலங்கையில் அப்பாவித் தமிழர்களின் அழிவைத் தடுத்து நிறுத்திட அறிவிப்புகள் செய்துள்ளன.

நமது வேண்டுகோளின் படி இந்திய மத்திய அரசு, எடுத்த முயற்சிகளால் ஐ.நா. மன்றம் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன், டோக்கியோ

கூட்டமைப்பு நாடுகள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் என அந்த அறிவிப்புகளை வரவேற்கிற அதே நேரத்தில் போற்றத்தக்க அளவில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரின் அறிவிப்புகளும் வெளிவந்துள்ளன.

இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் இம்மாதம் தொடர்ந்து நாம் நடத்த இருக்கிற பேரணிகள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் இவற்றில் தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கிடையே ஆம் நமக்குள்ளே போராட்டம் நடத்திக் கொண்டிராமல், இந்திய மத்திய அரசும் வேடிக்கை பார்க்கவில்லை என்ற நிலை உணர்ந்து விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்கும், இந்தப் பிரச்சனைக்கும் சம்பந்தமில்லை. இது பாசம், உறவு, உணர்வு இவற்றோடு ஒன்றிக் கலந்தது எனும் உண்மை உணர்ந்து, கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு ஒரே குரலில் ஒலித்து, இரண்டு பிரிவுகளாய் இருப்பினும், கத்திரிக்கோல் போல இருந்து காரியமாற்றிடக் கடமைப்பட்டவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

ஜெயலலிதா தலைமையில் பின்பற்ற வேண்டும்

இன்றைய பிரதான எதிர்க்கட்சி, அ.தி.மு.க.வின் சார்பில் அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது கொண்டிருந்த இலங்கைத் தமிழர் பற்றிய கொள்கையை, அவர் ஏற்ற நடைமுறையை, இன்றைக்கும் அக்கட்சியின் உடன்பிறப்புகள், ஜெயலலிதா தலைமையில் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டு, அவ்வாறே எதிர்பார்த்து, இரு பிரிவாக நமது ஆதரவு அணிகள் இயங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாப்பதில், ஒன்றாக இருப்போம் வாரீர் என்று அழைக்கிறேன்.

எல்லோரும் ஒன்றுபட்டால் இலங்கைத் தமிழினம் காக்கப்படும் என்பது உறுதி, உறுதி, உறுதி.

அந்த நிலையை நோக்கி நாம் நடக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் நடைபெறும் - பேரணி, பொதுக் கூட்டம், அறப்போர் ஆர்ப்பாட்டம் அனைத்திலும் யாரையும் புண்படுத்தாத முழக்கங்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்க! நிலையான அமைதிக்கு வழி காண்போம்; வாரீர்! தமிழினம், தாழாது, தாழாது! யாரையும் தாழ்த்தாது!, தடுப்போம் - தடுப்போம், இனப்படுகொலையை தடுப்போம்!.

உடன்பிறப்பே இந்த முழக்கங்களை மட்டும் இதனையொட்டிய முழக்கங்களை மட்டும் பேரணிகளில் கூட்டங்களில் ஒலித்திட வேண்டுகிறேன் எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil