முத்துக்குமார் மரணத்தை கொச்சைப்படுத்தும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தலைவர்கள் அரசியல் இலாப நஷ்டம் பார்க்காமல் ஓரணியில் நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் தி.மு.க, காங்கிரஸ் கட்சியினரும் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்ட த.வெள்ளையன், இதில் அரசியல் பார்க்கக் கூடாது. அரசியல் வேறு, இலங்கைத் தமிழர் பிரச்சனை வேறு என்பதை உணர்ந்து ஒன்று சேர வேண்டும் என்றார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி தனது உயிரை மாய்த்து கொண்ட முத்துக்குமார் மரணத்தை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி கொச்சைப்படுத்தி பேசுவது மன்னிக்க முடியாத குற்றமாகும் என்று கூறிய த.வெள்ளையன், முத்துக்குமார் மரணம் குறித்து வதந்தி பரப்பிவரும் சுப்பிரமணிய சாமியை கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.