சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு ஏற்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பக்தர்கள் சட்டையில் கறுப்பு பேட்ஜ் அணிவதுடன், வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மதசார்பற்ற அரசுக்கு மதசின்னங்களான கோயில்களில் தலையிட எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. மசூதி, சர்ச்சுகளை நிர்வகிக்க துணிவில்லாத அரசு இந்து கோயில்களில் தலையிடுவதும், அவற்றை சீர்குலைக்க முயல்வதும் அப்பட்டமான இந்து விரோத செயலாகும்.
பல்லாயிரம் கோடி ரூபாய் பெருமானமுள்ள கோயில் நிலங்கள் தி.மு.க மற்றும் சர்வ கட்சிகாரர்கள் ஆக்கிரமித்தும், தம்வசம் வைத்து கொண்டிருப்பதை மீட்க உருப்படியான நடவடிக்கைகள் எதையும் இந்த தி.மு.க அரசு எடுக்கவில்லை. அறிக்கைகள் வெளியிடுவது மட்டும் நடவடிக்கை ஆகாது. கோயில் நகைகள் உண்மையானது தானா என்பது பற்றி மக்களுக்கு பலத்த சந்தேகம் இருக்கிறது.
கோயில்களில் ஊழல் நடப்பதாகவும், அதனால் தான் அரசு தலையிடுவதாகவும் அரசு சொல்வது முதலை கண்ணீர் வடிப்பதாகும். தி.மு.க அரசு பலவிதமான ஊழல் குற்றச்சாற்றுகளுக்கு ஆளாகி இருக்கும் போது இவர்களுக்கு ஊழல் குற்றம் சாட்ட என்ன யோக்கியதை இருக்கிறது.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து தம்முடைய கட்சி கொள்கைகளை இந்துக்கள் மீது மட்டும் திணித்து வருகிறது. உதாரணமாக பொதுமக்கள் தமிழ்புத்தாண்டை சித்திரை 1ஆம் தேதி கொண்டாடி வருவதை மாற்றி தை 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்து அமல்படுத்தியிருப்பதும், மாற்று மத புத்தாண்டுகளில் தலையிடாமல் இருப்பதும் வெட்க கேடானது.
ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் நடைகளை திறந்து பூஜைகள் நடப்பது வாழிபாட்டையே கொச்சைப்படுத்துவது ஆகும். மாலிக்கபூர் படையெடுப்பின் போது சிதம்பரம் நடராஜர் கோயிலும் தாக்கப்பட்டது. அதன் பிறகு வேறு எவருமே செய்திராத அநியாக செயலை பக்தர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதன் மூலம் மாலிக்கபூரின் மறு அவதாரமாக கருணாநிதி வரலாற்றில் இடம்பெற முயற்சிக்கிறார். இது முற்றிலும் அதிகார துஷ்பிரோயகம். இந்து விரோதம். இலங்கை பிரச்சனை விடயத்தில் பதில் சொல்ல முடியாமல் கருணாநிதி படுதோல்வி கண்டுள்ளார்.
இதை திசை திருப்புவதற்காக சிதம்பரம் கோயில் பிரச்சனையை தூண்டி விட்டிருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். எனவே பக்தர்கள் இதை கண்டித்து சட்டைகளில் பேட்ஜ் அணிவதும், வீடுகளில் கறுப்பு கொடியும் ஏற்ற வேண்டும் என்றும் அவரவர் குல தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் ராமகோபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.