அண்ணா நூற்றாண்டு விழாயொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல் தன்னையும் முன்கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று சாமியார் பிரேமானந்தா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
திருச்சி அருகே உள்ள எடமலைப்பெட்டியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா. இந்த ஆசிரமத்தில் தங்கியிருந்த பல இளம் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பிரேமானந்தா, அவரது சீடர் கமலானந்தா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் அபராதமும் புதுக்கோட்டை நீதிமன்றம் விதித்தது.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பிரேமானந்தா கடலூர் மத்திய சிறையிலும், மற்றவர்கள் திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமானந்தா மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து விட்டதாகவும், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல் தன்னையும் முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், சசிதரன் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரேமானந்தாவை முன் கூட்டி விடுதலை செய்ய முடியாது என்று கூறி மனுவை நிராகரித்தனர்.
மேலும் பிரேமானந்தா சீடர்கள் மனுவும் நிராகரிக்கப்பட்டது.