இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து அரசு பேருந்தை எரித்த 3 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் அருகே கடந்த மாதம் 30ஆம் தேதி அரசு பேருந்தை அடையாளம் தெரியாதவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர்.
இந்த கும்பலை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரணை செய்ததில், திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் நரசிங்கபுரத்தை சேர்ந்த அம்பேத்கர் பாசறை இயக்க மாநில செயலர் மாயன், யோவான், தனசேகரன், தயாளன், இளையராஜா, சார்லஸ் ஆகியோரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக கூறி மாயன், யோவான், தயாளன் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரியய்யா, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் மிஸ்ரா உத்தரவின் பேரில் 3 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.