பொது வேலை நிறுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், பொது வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு, அந்த முயற்சி தோல்வி அடைந்தது. தேசப் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை என காவல்துறை மிரட்டியது.
இவை அனைத்தையும் தாண்டி தமிழ்நாட்டு மக்கள் எவ்வித வற்புறுத்தல், மிரட்டலுமின்றி பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டியதற்காக தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், பொது மக்கள் அனைவரையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டி நன்றியை தெரிவிக்கிறது.
இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை, நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.