இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வற்புறுத்தி மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளுக்குத் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், எல்லா அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்திற்கு வந்தால், தேர்தல் புறக்கணிப்பு முடிவை அறிவிக்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. இருக்கும் என்று கூறியுள்ளார்.
எப்படி ஒரு கிராமத்தினர் தேர்தலைப் புறக்கணித்தால், அவர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களைத் தேர்தலில் பங்கேற்கச் செய்ய மாநில அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுக்குமோ, அதேபோல தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணித்தால், மத்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விரைந்து செயல்பட்டு போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்று விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஒருவேளை இலங்கை இனப் படுகொலைகளைத் தடுப்பதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டால், அதன்பிறகு தேசிய அரசியலில் மாநிலக் கட்சிகள் பங்கேற்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்தால், மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து, இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
அப்படி எல்லா அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்திற்கு வந்தால், தேர்தல் புறக்கணிப்பு முடிவை அறிவிக்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. இருக்கும்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
மற்றொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட முடியாது என்று இந்தியா கூறுவது பொருத்தமற்றது என்று கூறியுள்ள விஜயகாந்த், இலங்கையில் இனப் பிரச்சனையை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்ற விவகாரத்தை இந்தியா மட்டுமே ஐ.நா.வில் எழுப்பியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.