பவானிசாகர் அகதிகள் முகாமில் 2,500 பேர் உண்ணாவிரதம்
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு : இலங்கையில் நடந்து வரும் போரை நிறுத்தக் கோரியும், அங்குள்ள தமிழர்களை காப்பாற்றக் கோரியும் பவானிசாகரில் இலங்கை அகதிகள் 2,500 பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பவானிசாகரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 3,000 அகதிகள் வசித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் இதுபோன்று போர் நடந்தபோது இவர்கள் அங்கிருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்தவர்கள்.
இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தி அங்குள்ள தமிழர்களை காப்பாற்றகோரி நேற்று காலை முதல் மாலை வரை பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் முன் அகதிகள் 2,500 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இந்த முகாமிற்கு அகதிகள் முகாம் பொறுப்பாளர் நடராஜ் தலைமை தாங்கினார். சத்தியமங்கலம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) சுந்தரராஜன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத பந்தலில் ஈழத் தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.