இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவபொம்மையை எரித்தனர். இது தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திடீரென அவர்கள் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், எரிந்து கொண்டிருந்த உருவபொம்மையை அணைத்தனர்.
உருவபொம்மை எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட திருமலை, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் துணை செயலாளர் ரவிக்குமார், கோவில்பட்டியை சேர்ந்த ரவி, விவேக் உள்பட 5 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.