இலங்கை தமிழர்களுக்காக உலகநாடுகளின் ஆதரவை திரட்ட தி.மு.க. தலைமைக் கழகம் குழு ஒன்றை அமைத்துள்ளது. அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் முன்னாள் நீதிபதிகள் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், அந்த நாட்டில் சிங்களவர்களுக்கு இணையான சம உரிமையும், அதிகாரப்பகிர்வும் பெற்றிடும் இனமாகத் தமிழ் இன மக்களும் சுமூக சூழலில் வாழ்ந்திட வகை காணும் ஒப்பந்தங்களும் நிறைவேறிட;
தமிழ்நாட்டில் தி.மு.க செயற்குழுவில் தீர்மான வடிவில் சுட்டிக்காட்டியுள்ள குறிக்கோள் நிறைவேறிட; இப்போது அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவைக்கு துணை அமைப்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவுக்கு தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் அமைப்பாளராக இருப்பார். தமிழர் தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் ஆ.இராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் செயலாளர்களாக இருந்து இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு நாடுகளில் உள்ள ஆர்வலர்களோடு தொடர்புகொண்டு உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவார்கள்.
இக்குழுவில் நீதிபதிகள் மோகன், பி.ஆர். கோகுல கிருஷ்ணன், பாஸ்கரன், சிவசுப்ரமணியம், ஏ.கே.இராஜன், ஜனார்த்தனம், சாமிதுரை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அமைப்பு எண்.24, காந்தி மண்டபம் ரோடு, கோட்டூர்புரம், அடையார், சென்னை 600 085, தென்னிந்தியா என்ற முகவரியில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.