இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இன்று நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. ரயில்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் எல்லா பகுதிகளிலும் ஓடியது.
பொது வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து சென்னையில் 10,000 காவலர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மாநிலம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. பால், பத்திரிகை, காய்கறிகள், மருந்துகள் ஆகியவற்றின் வினியோகத்திலும் பாதிப்பும் இல்லை.
இதேபோல் வங்கிச் சேவைகள் வழக்கம் போல் நடந்தன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னையில் கட்சி அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள், இலங்கை தூதரகம், இலங்கை வங்கி, எழும்பூரில் உள்ள புத்தர் கோவில் போன்றவற்றுக்கு 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் இன்று வழக்கம் போல இயங்கியது. வெளியூர்களில் இருந்து லாரிகளில் காய்கறிகள் வந்தன. ஆனால் காய்கறிகளை வாங்க வருபவர்கள் எண்ணிக்கை மட்டும் சற்று குறைவாக இருந்தது.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புக்கு இடையில் பேருந்துகள், ரயில்கள் போல் ஓடியது.
ஆனால் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.