முதலமைச்சர் கருணாநிதி மேலும் ஒரு வாரம் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
முதுகு வலி காரணமாக முதலமைச்சர் கருணாநிதி கடந்த 25ஆம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர், நேற்று அண்ணா நினைவு நாள், அமைச்சரவைக் கூட்டம், தி.மு.க தலைமை செயற்குழு கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்தார்.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் கருணாநிதியை பரிசோதித்த மருத்துவர்கள், மேலும் ஒரு வாரத்திற்கு கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வார காலமாக தனது முதுகு வலிக்காக சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதிக்கு, இன்று காலை 6 மணி அளவில், எலும்பு சிகிச்சை நிபுணர்களால், அறுவை சிகிச்சை அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, குறிப்பிட்ட உடல் பகுதிகளில் ஊசி போடப்பட்டு, முதுகெலும்பில் வலியை ஏற்படுத்தி வரும் தசைப் பிடிப்பை அகற்றுவதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சிகிச்சைக்கு பிறகு முதலமைச்சர் கருணாநிதி ஒரு வாரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் நேரில் வருவதை தவிர்த்து முதலமைச்சர் விரைவில் முழு உடல் நலம் பெற்று பணியைத் தொடர ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.