தமிழகத்தில் இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் மாவட்டங்களின் பல்வேறு பகுதியில் இன்று நடந்த நிகழ்வுகளில் 45க்கும் மேற்பட்ட பேருந்துகளை அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசி தாக்கினர். இதைத் தொடர்ந்து பேருந்துகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்திற்கு இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் அழைப்பு விடுத்திருந்தது. தமிழ் உணர்வுள்ளவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால் அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கின.
தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டுள்ளன. சேலத்தில் 5 பேருந்துகளும், தர்மபுரியில் 5 பேருந்துகளும், கடலூரில் 3 பேருந்துகளும், பழனியில் 2 பேருந்துகள் உள்பட தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 பேருந்துகள் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதையடுத்து அப்பகுதியில் பெருமளவில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் பாப்பம்பட்டியில் இருந்து உக்கடத்துக்கு இன்று அதிகாலை அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. திருச்சி சாலையில் உள்ள சுங்கம் பகுதியில் பேருந்து வந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்து மீது சரமாரியாக கல் வீசி தாக்கினர். இதில் பேருந்து ஓட்டுனர் முருகசாமி (52) என்பவர் காயம் அடைந்தார்.
இதே போன்று மற்றொரு பேருந்து மீதும் கல் வீசி தாக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனியில் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதே போல நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே இன்று அரசு பேருந்து ஒன்று கல் வீசி உடைக்கப்பட்டது. இதில் ஓட்டுனர் காயம் அடைந்தார்.
தர்மபுரியில் எல்.ஐ.சி. அலுவலகம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலால் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நடக்காமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.