இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பெருவாரியான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே சில காய்கறி கடைகள், உணவு விடுதிகள் மட்டுமே திறந்திருந்தன.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று நடத்தப்பட்டு வரும் பொது வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை காண முடிந்தது.
சென்னையில் முக்கிய வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள தியாகராய நகர், புரசைவாக்கம், பாரிமுனை, பாண்டிபஜார் உள்பட பல்வேறு இடங்களிலும் ஒருசில சிறிய கடைகளைத் தவிர்த்து பெரும்பாலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
ஆனால் பேருந்து, ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் எந்தவிதமான பாதிப்புக்கும் ஆளாகவில்லை. வேலைக்கு செல்வோர் சிரமமின்றி சென்றனர்.
சென்னை புறநகர் பகுதிகளான குரோம்பேட்டையில் கடைகள் திறந்திருந்தன. ஆனால் செங்குன்றம், புழல், கொளத்தூர், அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில டீக்கடைகள் மட்டுமே திறந்திருந்தன.
இதேபோல் மாநிலம் முழுவதும் பெருவாரியான கடைகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும், ஆங்காங்கே உணவு விடுதிகள், காய்கறிகள் கடைகள் மட்டுமே திறந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விழுப்புரம், கடலூர் உள்பட பல மாவட்டங்களில் நேற்றிரவே பேருந்துகள் நிறுத்தப்பட்டன. அந்த மாவட்டங்களில் பொது வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள், வணிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.