காஞ்சிபுரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய ம.தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தும் அந்நாட்டு அரசை கண்டித்தும், போரை நிறுத்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க.வினரும் தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
காஞ்சிபுரம் நகர ம.தி.மு.க செயலர் வளையாபதி தலைமையில் 25க்கும் மேற்பட்ட ம.தி.மு.க.வினர் காஞ்சிபுரம் மார்க்கெட் அருகே இன்று காலை கும்பலாக வந்தனர். அனைவரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) சமுத்திரகனி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 25 ம.தி.மு.க வினரையும் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.