சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்பதற்கான தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தீட்சிதர்கள் முடிவு செய்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டதையடுத்து, இரவோடு இரவாக கடலூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பிரதீப் குமார் தலைமையில் ஏராளமான காவலர்கள் கோயில் முன்பு குவிக்கப்பட்டனர்.
நடராஜர் கோயிலை ஏற்பதற்கான கடிதத்துடன் இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையர் திருமகள் நேற்று இரவு சரியாக 8.40 மணிக்கு கோயிலிற்கு வந்தார். ஆனால் தீட்சிதர்களின் தரப்பில் கடிதத்தை வாங்க மறுக்கப்பட்டது. தங்களுக்கு இன்னும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்று தீட்சிதர்கள் தரப்பில் அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
நீண்ட வாக்கவாதத்திற்குப் பிறகு, கடிதத்தை வாங்க மறுத்தால் 'தீட்சிதர்கள் ஏற்கவில்லை' என்று கோயிலில் தாக்கீது ஒட்டிவிட்டுச் செல்வதாக இணை ஆணையர் திருமகள் கூறினார். இதையடுத்து, கடிதத்தை வழக்கறிஞர் மூலம் படித்தறிந்த பிறகு தீட்சிதர்கள் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் கோயிலின் நிர்வாக அதிகாரியாக கிருஷ்ணகுமார் பொறுப்பேற்றுக் கொண்டார். நீதிமன்ற உத்தரவை மேற்கொள்காட்டி இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுப்படி கிருஷ்ணகுமார் பதவியேற்றுக்கொண்டதாகக் கோயில் வளாகத்தில் தாக்கீது ஒட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் சிவக்குமார் கூறுகையில், "இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வந்துள்ளனர். எங்களுக்கு இன்னும் நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன் மேல்முறையீடு செய்வது குறித்துப் பரிசீலிப்போம்." என்றார்.