''
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு நடவடிக்கை திருப்தியாக இல்லை'' என்று முதலமைச்சர் கருணாநிதி கூறினார்.
தி.மு.க. செயற்குழு முடிந்த பின்பு செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி பேட்டி அளித்தார். அப்போது, இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா? என்று கேட்டதற்கு, அதற்காகத்தான் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் என்றும் மாநில அரசுக்கு நேரடியாக தலையிட்டு போரை நிறுத்த அதிகாரமோ, வலிமையோ இல்லை என்றார்.தி.மு.க அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டப்படுவதாக கூறி உள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்ட போது, தேவையற்ற கிளர்ச்சிகளை நடத்துகின்றனர். முதலில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராட்டம் நடத்துவதாக அறிவித்து விட்டு இப்போது பிரதான கட்சியான தி.மு.க.விற்கு எந்த அழைப்பும் இல்லை. இது ஒன்றே போதாதா? என்று கருணாநிதி கூறினார்.தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, இது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.முதலமைச்சர் என்ற முறையில் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று கேட்டபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார்.ராஜபக்சே தமிழக அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது பற்றி கேட்டதற்கு, எதுவும் கூறவிரும்பவில்லை என்றார்.பொது வேலை நிறுத்தம் தேவையற்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் கூறியுள்ளதற்கு பதில் அளித்த கருணாநிதி, அவரது கருத்தை வரவேற்கிறேன் என்றார்.
இலங்கையில் பாதுகாப்பு பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடத்திலும் இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து கேட்டதற்கு, இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதில் இருவேறு கருத்துக்கே இடமிருக்க முடியாது. இதனை தடுத்து நிறுத்திட தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அப்படி என்றால் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துக்கு அழைப்பு விடுப்பீர்களா? என்று கேட்டபோது, மதியார் தலைவாசல் மிதிக்க மாட்டோம் என்று பதில் அளித்தார் கருணாநிதி.
இலங்கை பிரச்சனையில் தமிழர்களின் பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்றும், பிரபாகரனோடே சமரச தீர்வு குறித்து பேச முடியும் என்றும் கூறப்படுகிறதே? என்று கேட்டதற்கு, பிரபாகரனா அல்லவா என்பது அல்ல பிரச்சனை. இலங்கையில் நடைபெறும் தமிழர் படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.
ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கூறியுள்ளதை பற்றி என்று கேட்டதற்கு, ஐ.நா தலையிட்டால் நல்லது. வரவேற்பேன் என்றார்.
இலங்கையில் நடக்கும் போரை இந்தியாதான் பின்நின்று நடத்துகிறது என்றும் தேவையான எல்லா உதவிகளையும் அளிக்கிறது என்றும் குற்றம் சாட்டப்படுகிறதே? என்று கேள்விக்கு, இத்தகைய பொய் குற்றச்சாற்றுக்கு பல முறை இந்தியா பதில் அளித்து விட்டது. பாதுகாப்பு அமைச்சரும் உரிய பதில் அளித்துள்ளார் என்றார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு நடவடிக்கை எப்படி என்று கேட்டதற்கு, போதுமானதாக இல்லை என்பதால்தான் இன்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம் என்றார்.
பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் திருப்தி அளிக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி, அவருக்கே முழு திருப்தி இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றார்.