''
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது'' என்று முதலமைச்சர் கருணாநிதி குற்றம்சாற்றியுள்ளார்.சென்னையில் இன்று நடைபெற்ற தி.மு.க செயற்குழுவில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தி.மு.க கடந்த பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறது. அதற்காக வாதாடியும், போராடியும் வருகிறது. என்றும் இந்த நிலையில் தொடர்வோம்.
இப்போது தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக புதிய குரல் கிளம்பி இருக்கிறது. 1956 ஆம் ஆண்டு முதல் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக பல்வேறு தலைவர்கள் தமிழ்நாட்டை நாடி வந்திருக்கிறார்கள். அப்போது தந்தை செல்வா, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்கள் பெரியார், அண்ணா, நான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார்கள்.அதனடிப்படையில் அவர்களுக்காக குரல் கொடுத்துள்ளோம். அதனை தொடர்ந்து 1983- 84 கால கட்டத்தில் குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உள்ளிட்டோர் கொடூரமான படுகொலைக்கு ஆளாகி சிங்கள ராணுவத்தின் தமிழர் அழிப்பு நடவடிக்கை நடந்தது. அப்போது மீண்டும் அமிர்தலிங்கம் தமிழகத்திற்கு வந்து ஆதரவு கோரினார். தமிழனுக்கு தமிழன் உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம். அதன் பின்னர் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தோன்றின.அவர்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து போராடியிருந்தால் அவர்கள் விரும்பியபடி தமிழீழம் என்றைக்கோ மலர்ந்திருக்கும். ஆனால் பிரபாகரனை ஒரு சர்வாதிகாரியாக ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே அங்கு செயல்பட முடியும் என்ற நிலை அங்கே உருவானது. இதனை தொடர்ந்து பலர் அழித்தொழிக்கப்பட்டனர். சகோதர யுத்தம் காரணமாக ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். விடுதலைப்புலிகள் தங்களைத் தாங்களே நிலை நிறுத்திக் கொண்டனர். இலங்கைத் தமிழர்களையே நாங்கள் ஆதரிக்கிறோம். தனிப்பட்ட பிரபாகரனுக்காக எங்கள் ஆதரவு இல்லை.ஒரு பக்கம் பிரபாகரன், முகுந்தன், கருணா என்று பிரிந்து சிலர் சிங்களர்களுக்கு ஆதரவாக மாறி விட்டனர். அமிர்தலிங்கம் கூட புலிகளால் விருந்துக்கு அழைக்கப்பட்டு அவர் மனைவி கண் எதிரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொடுமைகளை எல்லாம் மறந்து தமிழர்கள் உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காக நாம் குரல் கொடுக்கிறோம்.
தி.மு.க. இதையே வலியுறுத்தி வருகிறது. ஆனால் சில நேரங்களில் இது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. நாங்கள் குரல் கொடுப்பது இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமே.
ஒரு தடவை ஒரு ஆங்கில பத்திரிகைக்கு பிரபாகரன் கொடுத்த பேட்டியை படித்தேன். அப்போது ஈழம் கிடைத்தால் உங்கள் ஆட்சி எப்படி இருக்கும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு சர்வாதிகாரமாக இருக்கும் என்று கூறியிருந்தார். அதை படித்தப் பிறகு அவர்களது போராட்டம் புளித்து விட்டது. தொடர்ந்து பலர் கொல்லப்பட்டனர். இதனால் அனுதாபம் குறைந்து, மறந்தே விட்டது. ஆனால் இன்று தமிழர்கள், பச்சிளம் குழந்தைகள், கொல்லப்படுகிறார்கள். தாய்மார்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள். இதனை தாங்காமல் கதறி அழும் அவர்கள் தமிழகம் நம்மை காப்பாற்றாதா என்று அவலக் குரல் எழுப்புகிறார்கள். அதற்கு நாம் உதவ வேண்டாமா என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த கூட்டத்தை இன்று நாம் கூட்டியிருக்கிறோம்.
ஆதரவு என்றால் ஆயுதமேந்தியோ, போர் தொடுத்தோ ஆதரவை அளிக்க முடியாது. தமிழக சக்தியை ஒன்று திரட்டுவதன் மூலமாகவே ஆதரவை அளிக்க முடியும். ஜனநாயக ரீதியில் தான் அந்த சக்தியை நாம் திரட்ட முடியும். அந்த வகையில்தான் இன்றைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சில கட்சிகள் ஏதோ தாங்கள்தான் இலங்கை தமிழர்களின் பிரதிநிதிகளைப் போல காட்டிக் கொள்கிறார்கள். நாம் இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டது போல பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
டாக்டர் ராமதாஸ் எல்லாம் முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும் என்றார். என்னை எல்லாம் சொல்ல வைத்து எனக்கும், மத்திய அரசுக்கும் விரோதம் ஏற்படுத்தி, இவர் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்ள நினைக்கிறார். ஆட்சியை விட்டு வெளியே போகிறோம் என்று ஒரு பத்திரிகை செய்தி போடுகிறது. இந்த ஆண்டுக்குள் தி.மு.க. முடிந்து எங்கள் ஆட்சி வரும் என்று ஜெயலலிதா கூறினார். இலங்கை பிரச்சனைக்காக போராடுவதாக கூறி ஆட்சியைக் கவிழ்க்க சதி நடக்கிறது. நாங்கள் வெளியேறி விடுவோம் என்று நினைக்கிறார்கள்.
அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் உங்களை நம்பி சொல்கிறேன். இந்த அண்ணன் சாக மாட்டான்; திண்ணையும் காலியாகாது என்று அவர்களுக்கு உணர்த்தும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களோடு பேசக் கூடியதும், அவர்கள் மீது பற்றும், பாசமும் வைக்கக் கூடிய ஒரே கட்சி தி.மு.க.தான். வேறு யாருக்கும் அந்த உரிமை இல்லை.
இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற புறப்படுவது போல சிலர் நாடகமாடுகின்றனர். அவர்களை பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்ல நாம் எப்படி செயல்படுவது என்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தை ஏற்று நீங்கள் செயல்பட வேண்டும் என்று கருணாநிதி பேசினார்.